2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வரட்சி நிவாரணத் திட்டத்தில் “பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட வேண்டும்”

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வரட்சி நிவாரணத் திட்டத்தில், பெருந்தோட்டப் பகுதி மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். தோட்டப் பகுதி மக்களுக்கும், திட்டமிட்ட குடிநீர் விநியோகத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த வரட்சி தொடர்பிலான ஒத்திவைப்பு பிரேரணையின்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு மேலும் கூறிய அவர்,

“நாட்டில் நீடித்து வரும் வரட்சியால், 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதானமாக விவசாய பயிர்ச்செய்கையே அதிகளவு பாதிப்படைந்துள்ளது. அதனால், விவசாயத்தை மேற்கொண்டு வரும் மக்கள், வாழ்வாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி, இதன் மறுபக்கமாக குடிநீர் பிரச்சினை, பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.

“இன்றைய வரட்சி சூழலில், பல்வேறு பாதிப்புகளை பெருந்தோட்ட மக்களும் எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், அவை இங்கு வெளிக்காட்டப்படாதுள்ளது.
“குறிப்பாக திட்டமிட்ட நீர்வழங்கல், தோட்டப் பகுதிகளில் இல்லாததால், பாரிய குடிநீர் பிரச்சினையை தோட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மலையகத்திலுள்ள தோட்டப் பகுதிகள் நீர்வளம்மிக்க, நீரேந்து பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. இந்த நீர் வளத்தை மையமாகக் கொண்டு, பெருமளவான குடிநீர் விநியோகத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களிலிருந்து, கிராமப் பகுதி மக்களும் நகரப் பகுதி மக்களுமே பயனடைகின்றனர்.

“தமது கண்ணெதிரேயே இருக்கின்ற நீர் வளத்தைத் தமக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாத, வேறு பிரிவினரால் சுரண்டப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு, தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

“கண்டி மாவட்டத்தின் சங்குவார் தோட்டத்திலிருந்து கம்பளை நோக்கி கிராம, நகர பகுதிகளுக்கு, நீர்விநியோகம் நடைபெறுகின்றது. ஆனால், அதற்கு அண்மையில் இருக்கின்ற சங்குவார் தோட்டம், அட்டபாகே தோட்டம், சோகம தோட்டம் போன்ற பல இடங்களில், குடிநீர் பிரச்சினை உக்கிரமடைள்ளது.

“அதேபோன்று, நாவலபிட்டிய இம்புல்பிட்டிய தோட்டத்தில் இருந்து நாவலபிட்டிய நகர் நோக்கி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால், இம்புல்பிட்டிய தோட்ட மக்கள், குடிநீர் வசதி இன்றி தவிக்கின்றனர். எனவே, மலையக தோட்டப் பகுதிகளுக்கும், திட்டமிட்ட நீர் வளங்கள் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

“வரட்சி காரணமாக, தேயிலைக் கொழுந்து வளர்ச்சியும் குறைவடைந்துள்ளதால், தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேலைநாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், தொழிலாளர்கள் போதிய வருமானமின்றி, பொருளாதார பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளனர்.

“எனவே, அரசால் வழங்கப்படும் வரட்சி நிவாரணத் திட்டத்தில் எமது தோட்ட மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். அதன்போதே, அரசால் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய வரட்சி நிவாரணக் கொடுப்பனவுத் திட்டம் முழுமையாக வெற்றியடையும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .