Editorial / 2017 ஜூன் 15 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்
ஹட்டன் - டிக்கோயா நகர சபை பகுதியில், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
ஹட்டன் பிரதேசத்தில் சேரும் குப்பைகள் கடந்த 17 நாட்களாக அகற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (15) காலை, ஹட்டன் நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு நகர வர்த்தகர்களினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி ஆர்ப்பாட்டமானது, ஹட்டன் மணிக்கூண்டு சந்தியில் இடம்பெற்றது. பின்னர் நகரின் பிரதான பாதையில் எதிர்ப்பு ஊர்வலமொன்றும் இடம்பெற்றது.
இதன்போது ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
“ஹட்டன் நகரில் சேரும் குப்பைகள், கடந்த பல வருடங்களாக, ஹட்டன் - குடாகம பகுதியில் கொட்டப்பட்டுவந்த நிலையில், அப்பிரதேச மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தினால், அப்பிரதேசத்தில் கழிவகற்றுதற்கு முடியாத நிலை உருவானது.
“இதனைத் தொடர்ந்து கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, மஸ்கெலியா போன்ற பிரதேசங்களுக்கு “ஹட்டன் நகரசபை குப்பைகள் கொண்டு சென்று கொட்டப்பட்டன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அங்கும் குப்பை கொட்டுவது தடைசெய்யப்பட்டது.
“இதனால், மேற்படி பிரதேச குப்பைகளை கொட்டுவதற்கு உகந்த இடம் கிடைக்கப்பெறாததால், ஹட்டன் குப்பைகள் கடந்த சில நாட்களாக தேங்கி கிடக்கும் நிலை உருவானது.
“மழை காலத்தில், இக்குப்பைகள் மகாவலி மற்றும் காசல்ரி நீர் தேக்கங்களுக்கு செல்வதனால் இந்த நீரை பயன்படுத்தும் மக்கள் பாரிய சுகாதார அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
“கடந்த ஆறு, ஏழு வருடங்களுக்கு முன், ஹட்டன் நகர சபையினால் மக்கள் கழிவுகளை இடுவதற்கென நகர சபை எல்லைக்குள் பல்வேறு இடங்களில் சுமார் 75,000 ரூபாய் செலவில் 20 குப்பை தொட்டில்கள் சீமெந்தினால் கட்டப்பட்டிருந்தன. இந்த குப்பை தொட்டில்களை, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் பொறுப்பதிகாரிகள் கடந்த மே 28ஆம் திகதி உடைத்து அகற்றியதனால், குப்பைகள் வீதி முழுவதும் பரவியுள்ளன எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த ஆறுமுகன் தொண்டமான்,
“ஒரு மணித்தியலயத்தில், தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிகமாக நுவரெலியா நகரசபைக்குட்பட்ட பத்தனை பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“மேலும், ஹட்டன் - குடாகம பகுதியில், குப்பைகளை கொட்டுவது பொருத்தமற்றது. ஆகவே, ஹட்டன் - டிக்கோயா நகரசபை பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டுவதற்கு இனங்காணப்பட்டுள்ள 5 ஏக்கர் அரச காணியை உடனடியாக பெற்றுக்கொடுப்பதுடன், குப்பபைகளினூடாக பசளை தயாரிக்கும் நிலையமும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமானின் உறுதிமொழியை அடுத்து, 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தினால், ஹட்டன் நகரம் ஸ்தம்பிதம் அடைந்ததுடன், போக்குவரத்தும் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .