2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 மே 13 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தி.தவராஜ்

வட்டவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் ஒருவர் காணாமல்போன சம்பவத்தை தொடர்ந்து, வைத்தியசாலை அசமந்தபோக்குடன் செயற்படுவதாக கூறி வெலிஓயா தோட்ட மக்கள் நேற்று நண்பகல் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வெலிஓயா தோட்டத்தில் வசிக்கும் முத்தையா ஆறுமுகம் என்ற வயோதிபர் சுகவீனம் காரணமாக, கடந்த 9ஆம் திகதி, வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை, 10ஆம் திகதி இரவு முதல் காணவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் 11ஆம் திகதி தொலைபேசியூடாக  உறவினர்களுக்கு தகவலை வழங்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேற்படி வயோதிபரின் உறவினர்கள், உடனடியாக வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இந்நிலையிலே வட்டவளை ஆதார வைத்தியசாலை அசமந்த போக்குடன் செயற்படுவதாக கூறி தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலையில் ஊழியர் பற்றாக்குறை நிலவும் நிலையில் ஒவ்வொரு நோயாளர்களையும் தனித்தனி ஊழியர்களை கொண்டு கண்காணிக்க முடியாத நிலை காணப்படுவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் காணாமல் போனவரின் வயது மற்றும் நோய் தன்மையை கருத்தில் கொண்டு அவரது அருகில் இரவில் ஒருவரை அருகில் நிறுத்தும்படி தாம் கோரி இருத்ததாகவும் உறவினர்கள் அதனை கருத்தில் கொள்ளாத நிலையிலே வயோதிபர் காணாமல் போயுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக தமக்கு வைத்தியாசாலை மற்றும் உறவினர்களிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தாம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட்டவளை பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .