2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

புஸ்ஸல்லாவ நீவ்பீகொக் தோட்ட மக்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

George   / 2015 மே 29 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொழிலாளர்கள்சார் உரிமைகள் அனைத்தும் ஒப்பந்தத்திலேயே தங்கியுள்ளன. இந்த ஒப்பந்த்ததையும் கிழித்து எறிந்துவிட்டு தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களிடம்  அடாவடித்தனம் புரிந்து வரும் சம்பவங்கள் தற்போது  மலையகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனால் நாளாந்தம் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு சவாலகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

அவ்வாறான நிகழ்வு, புஸ்ஸல்லாவ நீவ்பீகொக் தோட்டத்தில் பதிவாகியுள்ளது. சம்பள ஒப்பந்தத்தில் 18 கிலோகிராம் கொழுந்து பறித்தால் நாள் சம்பளம் வழங்கப்படும். மிகுதியானவை மேலதிகமான கிலோகிராமாக கணிக்கப்பட்டு தலா 23 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

எனினும், இந்த தோட்டத்தில் மாத்திரம் 24 கிலோகிராம் கொழுந்து பறிக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்களை நிர்வாகம் நிர்பந்தித்து வருகின்றது. அது மட்டுமல்லாது நாள் ஒன்றுக்கு கழிவு என்ற போர்வையில் 4 கிலோகிராம் கொழுந்தும்  கழிக்கப்படுகின்றது.

இதனால் ஒரு தோட்ட தொழிலாளி நாள் ஒன்றுக்கு சுமார் 10 கிலோகிராம் தேயிலையை மேலதிகமாக இழக்கின்றார். இவ்வாறு இந்த தோட்ட நிர்வாகம் தொடர்ந்து 02 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த தோட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இது தொடர்பாக தோட்டத்தின் உயர் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது ஒப்பந்தத்தில் 18 கிலோகிராம் என காணப்பட்டாலும் தேயிலை கொழுந்து அதிகமாக காணப்படும் தோட்டங்களில் அவை மாற்றமடையும் என்று கூறினார். அப்படியாயின் ஒப்பந்தம் எதற்கு?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி தோட்ட மக்கள்,  28.05.2015 திகதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர் பின்னர், தோட்ட முகாமைக்கும் தொழிற்சங்ககளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் தோட்ட காரியாலயத்தில் பேச்சுவாரத்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தை வாத பிரதிவாதங்களின் பின் தீர்வின்றி முடிவடைந்தது.

இந் நிலைமை தொடர்பாக தோட்ட மக்களிடம் வினவிய போது இந் தோட்ட முகாமையார் தங்களை கொழுந்து என்ற போர்வையில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும். கட்டாயம் 24 கிலோகிராம் கொழுந்து பறிக்குமாறு பணிப்பதாகவும் கூறுகின்றனர்.

தோட்டத்தில் கொழுந்து அதிகமாக இருப்பதினால் ஆரம்பத்தில் 22 கிலோகிராம் கேட்டார் தற்போது 24 கிலோகிராம் கேட்கின்றார். நிலுவையின் போது 04 கிலோகிராம் கழிக்கப்படுகின்றது, இந் நிலையில் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றோம்.

அத்துடன் தோட்ட  நிர்வாகம் எங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்க மறுத்து வருகின்றது. முற்றிலும் இலாப நோக்காக செயற்ப்படும் இந்த நிர்வாகத்தினால் நாங்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தங்கள் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வினை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலையக மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களை கூறிக்கொள்ளும் மலையக அரசியல்வாதிகள், தோட்ட நிர்வாகத்துடன் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வார்களா?.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .