2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிரதமரை மாற்றவேண்டும் என்றால் தேர்தலை நடத்துங்கள்: பிரதமர்

Gavitha   / 2015 ஜூன் 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

பிரதமரை மாற்றவேண்டும் என்ற எண்ணம் சு.க.வுக்கு இருந்தால், தேர்தல் ஒன்றை நடத்தி பொதுமக்களின் ஆணையை பெற்று  பிரதமரை மாற்றுங்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஜனவரி எட்டாம் திகதி இந்நாட்டு மக்கள் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பினார்கள். மக்களால் வழங்கிய அத்தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாதுள்ள சு.க உள்ளிட்ட ஐ.ம.சு.மு.விலுள்ள சிலர்,  என்னுடைய பிரதமர் பதவியை மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். பிரதமர் பதவியை மாற்ற வேண்டும் என்றால், தேர்தல் ஒன்றை நடத்தி மாற்றுமாறு நான் அவர்களுக்கு கூற விரும்புகின்றேன்.

என்னை மாற்றி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் ஆக்குமாறு அவர்கள் கூறுகின்றனர். ஜனவரி எட்டாம் திகதி மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை, மீண்டும் பிரதமராக்க கோருவது எந்தளவுக்கு சரியானது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். ஐந்து மாதங்களுக்கு முன் மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை, மீண்டும் பிரதமராக்க மக்கள் ஒரு போதும் தயாரில்லை என்பது தெளிவாக உள்ளது. இதனை அறிந்த இவர்கள், பின் கதவால் மஹிந்தவை பிரதமராக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று நாட்டை பாதுகாக்க போவதாக சு.க.வைச் சேர்ந்த சிலர் கூறிக் கொண்டு இருக்கின்றார்கள். யாரிடம் இருந்து நாட்டை பாதுகாக்க போகிறார்கள். இன்று நாட்டை ஆட்சி செய்வது சு. க.வின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார்.

அவரிடம் இருந்து நாட்டை பாதுகாக்க போகின்றார்கள் என்றும் சிலர் கூறுகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .