Princiya Dixci / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் இருதய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் நிலையங்கள் மூன்று இயங்கிவந்த நிலையில், அவற்றில் இரண்டு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பாரிய உயிராபத்துக்கு முகங்கொடுத்து வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய தினம் சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர், வைத்தியக் கலாநிதி ராஜித சேனாரத்னவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், அரசாங்கம் இலவச வைத்தியத் துறைக்கென பாரியளவிலான நிதியை ஒதுக்கி செலவு செய்து வருகின்றது. வருடந்தோறும் இதற்கென வரவு - செலவுத்திட்டத்தில் பாரிய நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் மூன்று சத்திர சிகிச்சைக் கூடங்களில் இருதய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது அதில் இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள் மூடப்பட்டு, ஒரு சத்திர சிகிச்சை கூடத்தில் மாத்திரமே இருதய நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் நோயாளர்கள் தங்களுக்கான சத்திரி சிகிச்சைகளை மேற்கொள்ளுவதற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
கொழும்பு, தேசிய வைத்தியசாலையைப் பொறுத்தவரையில் இருதய கோளாறு தொடர்பில் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கட்டடமானது 1924ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், அதற்குப் பின்னர் இக் கட்டடம் புனர்நிர்மாணம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஏற்கெனவே மூடப்பட்டுள்ள இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும் புனர்நிர்மாணப் பணிகளுக்கென மூடப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவை இரண்டும் ஒரே தடவையில் மூடப்பட்டுள்ளதாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நோயாளர்கள் கொழும்பு, தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வருவதாலும், நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கும், உயிர் அச்சுறுத்தல்களுக்கும் உட்பட வேண்டிய அபாய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வசதியின்மை காரணமாக தனியார் வைத்தியசாலைகளை நாட இயலாத பல நோயாளிகள் தற்போதைய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்களுக்கான சத்திர சிகிச்சைக்கான நேரம் வரும்வரைக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
எனவே, தற்போது மூடப்பட்டுள்ள இரண்டு சத்திர சிகிச்சை கூடங்களும் எப்போது மீளத் திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்க வேண்டும். இருதய நோயாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தை புனரமைப்பதற்கு அல்லது அதனை வேறு கட்டடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்விரண்டு சத்திர சிகிச்சை கூடங்களையும் மீளத் திறக்கும்வரை மேற்படி நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு வசதியாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
குருநாகல் மற்றும் யாழ்ப்பாணத்தில் தனியான இருதய சிகிச்சைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்படுமென அரசு ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ள நிலையில், அது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் தனியான இருதய நோய் சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதற்கென வைத்திய ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டு சுமார் 09 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அது முறைப்படி இயங்க ஆரம்பிக்கவில்லை. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
24 minute ago
31 minute ago