2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நடைபாதையில் வியாபாரிகளுக்கு இடமில்லை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் அனுமதியின்றி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்களையும்  நடைபாதை வியாபாரிகளையும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கொழும்பு நகரசபை, பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகள் ஆகியவற்றின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

நடைபாதையில் பத்திரிக்கை விற்பனையாளர்களுக்கும் லொத்தர் விற்பனையாளர்களுக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்படும் எனவும், அலைபேசி விற்பனையாளர்கள் மற்றும் இலத்திரனியல் உபகரண விற்பனையாளர்களால் பாதசாரிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

சுயதொழில் வாய்ப்பு என்னும் பேரில் நடைபாதை அனுமதியைப் பெற்றுக்கொண்டவர்கள் அதனைக் கூலிக்கு விற்றுப்பிழைப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை காலமும் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதையில் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளால் பயணிப்பதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

கொழும்பு நகரிலுள்ள நடைபாதை வியாபாரிகள் அவர்களுடைய வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென பிறிதொரு இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையிலேயே இவ்விடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடைபாதை வியாபாரிகளுக்கென கொழும்பு நகரசபை, குறித்த மாற்றிடத்தினைப் பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளது. அப்பகுதியில், மின்சாரம், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு என்பவற்றினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.  

செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதிக்குப் பின்னர், கொழும்பு நகரசபை மற்றும் பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுதியில் வியாபாரிகள் தமது வர்த்தக நடவடிக்கையை முன்னெடுக்குமாறும், தமக்கென ஒதுக்கப்பட்ட நடைபாதையில் பாதசாரிகள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்துக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு, கொழும்பு மாநகரசபையுடன் நடைபாதை வியாபாரிகள் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

மேலும், இடைத்தரகர்கள் மூலம் செய்யப்படுகின்ற ஒப்பந்தமானது செல்லுபடியற்றது எனவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் அறிவித்துள்ளது.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஆலோசனைக்கு இணங்க இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X