2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நூலகர் அமைப்பின் சர்வதேச ஆய்வு மாநாடு

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

“நூலகங்களைப் புத்துயிரூட்டல்: பேண்தகைமைக்கான புத்திசாதுரியமிக்க பதிலீடு” எனும் பிரதான மையப்பொருளைத் தாங்கி இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் “10ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு” எதிர்வரும் 18ஆம் திகதி, புதன்கிழமையன்று கொழும்பு, மவுன்ட் லவினியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர் ஸ்தானிகர் உயர் அம்மணி றொபினா பி. மார்க்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கும் இம்மாநாட்டில், கருப்பொருள் ஆய்வு மைய உரைகளை களனிப் பல்கலைக்கழக, ஆங்கில சிரேஷ்ட பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்ஹ, ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக, உடற்கூற்றியல் சிரேஷ்ட பேராசிரியர் சுசிரித் மென்டிஸ் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

இம்மாநாட்டில் பலதரப்பட்ட ஆய்வுகள் வெளிக்கொணரப்படுவதுடன், கொழும்பு, பல்கலைக்கழக நூலகர், டொக்டர் பிரதீபா விஜயதுங்க தலைமையில் ‘மின்னியல்சார் யுகத்தினில் நூலகங்களைப் புத்துயிரூட்டுதலிலுள்ள சவால்களும், வாய்ப்புகளும்’ பற்றியதான சுவாரசியமான வட்டமேசைக் கலந்துரையாடலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வு அமர்வுகளுக்குத் தலைவர்களாக, இலங்கைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பிரதான நூலகர்களான, திருமதி சுமணா ஜெயசூரிய, டொக்டர் வத்மானெல் செனவிரட்ண, எல் .ஏ. ஜயதிஸ்ஸ ஆகியோரும், இறுதி நிகழ்வின் வழிநடத்துநர்களாக பி. விதானபத்திரண, ஹரிசன் பெரேரா, திருமதி தவமணிதேவி அருள்நந்தி ஆகியோரும் செயற்படுவார்கள்.

இம்மாநாட்டில் இதுவரைகாலத்திலும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிரதான நூலகர்கள் கௌரவிக்கப்படுவதுடன், ஆய்வு அமர்வுகளின்போது ‘மிகச் சிறந்த ஆய்வு’, ‘மிகச் சிறந்த ஆய்வு வெளிப்படுத்துநர்’ ஆகியோருக்கான விருதுகளும் வழங்கப்படவுள்ளன.

இம்மாநாடு குறித்து இலங்கைப் பல்கலைக்கழக நூலகர் அமைப்பின் தலைவர் டாக்டர் சமிந்த ஜயசுந்தர கருத்துக்கூறுகையில், “புத்தகங்களுடன் உறவாடிக்கொண்டிருக்கும் நூலகங்கள், உலகப்போக்குக்கேற்ப சற்று வெளியே உற்றுநோக்கி, சமகாலச் சந்ததியினரின் வீரியமிக்க அறிவுடை நிலைமையைச் சமாளிக்கும்வண்ணம், தம்மை உருமாற்ற வேண்டிய தேவை இருப்பதால், இதுகுறித்த ஆய்வுகளும் கலந்துரையாடல்களும் அவசியமாகிறது. இதற்கு இம்மாநாடு களம் அமைக்குமென நம்புகிறோம்” என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X