2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நாட்டின் எதிர்கால செயற்பாட்டுக்கு தடை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 18 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல்வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் காணப்படும் பிரிவினை, நாட்டின் எதிர்கால செயற்பாட்டுக்குத் தடையாகுமென, ஜனாதிபதி தெரிவித்தார்.

பாரம்பரிய அரசியல் கலாசாரம் மற்றும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு அனைவரும் நாட்டின் நலன்கருதி திறந்த மனப்பான்மையுடன் செயற்பட வேண்டுமென, வெலிகம நகரசபைக் கேட்போர் கூடத்தில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்ற தென் மாகாண அரச அதிகாரிகளின் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அரச சொத்துக்கள் மற்றும் வளங்களின் பயன்பாட்டின் போது, தமது நிறுவனத்தின் சொத்துகளை தமது தனிப்பட்ட சொத்தாகக் கருதி சில நிறுவனத் தலைவர்கள் செயற்படும் அதேவேளை நிறுவனங்களுக்கிடையே காணப்படும் போட்டித்தன்மை காரணமாக, நாட்டின் அபிவிருத்தி செயன்முறைக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படக் கூடாது எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அபிவிருத்தி செயற்பாடுகளின்போது அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் நாம் மாறவேண்டும் என்றும், நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் அதேவேளை அரச சேவையிலும் தெளிவான மாற்றமொன்றினை ஏற்படுத்த அரச அதிகாரிகள் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஊடகச் செயற்பாடுகளின்போது வர்த்தக நோக்கம் மற்றும் ஜனரஞ்சகத் தன்மையைக் கருத்தில்கொண்டு எதிர்மறையான செய்திகளை மாத்திரம் வெளியிடும் வகையில் செயற்படாது நாட்டைப்பற்றி சிந்தித்து செயற்படுவதற்கான பொறுப்பு ஊடகங்களைச் சார்ந்தது எனக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்காக நாட்டின் உண்மையான அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் பொறுப்பு சகல ஊடகங்களுக்கும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அபிவிருத்திச் செயற்பாடுகளில் அரச அதிகாரிகளின் பின்னணி தொடர்பில் தென் மாகாண அரச அதிகாரிகளைத் தெளிவுபடுத்துவதற்காக இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

“2030ஆம் ஆண்டளவில் வறுமையற்ற வலுவூட்டப்பட்ட இலங்கையை உருவாக்குவதில் அரச அதிகாரிகளின் செயற்பணியும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்” எனும் தொனிப்பொருளில் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அவர்களால் சிறப்பு விரிவுரை ஆற்றப்பட்டது.

தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண அமைச்சர்களான யு.ஜீ.டீ. ஆரியதிலக, எச்.டபிளியு. குணசேன, சந்திமா ராசபுத்ர, வீரசுமன வீரசிங்க ஆகியோர் உள்ளிட்ட தென் மாகாண சபை உறுப்பினர்களும், தென் மாகாண அரச அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X