2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'பெண்களுக்கு உரிமை மறுப்பு'

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாநூ கார்த்திகேசு

'எமது நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பானது அளப்பரியதாக உள்ளது. எனினும், அவர்களுக்கான சம உரிமை மறுக்கப்பட்டு வருகிறது' என அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, தெரிவித்தார்.

பல்கலைக்கழக பெண்களுக்கான இலங்கைச் சம்மேளனத்தின் 75ஆவது வருட நிறைவையொட்டி, வசதி குறைந்த பெண் பட்டதாரி மாணவிகள் 84 பேருக்கு, பல்கலைக்கழக பெண்களுக்கான இலங்கைச் சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் புலமைப்பரிசில் வழங்கிவைக்கும் நிகழ்வு, புதன்கிழமை (31) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைப் பொருத்தவரையில், வளங்களில் எவ்வாறு மட்டுப்பாடுகள் காணப்படுகின்றதோ அவ்வாறே சமத்துவத்திலும் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன.

ஆடைத்தொழிற்சாலைகள், தேயிலைத் தொழிற்சாலைகள், இறப்பர் தொழிற்சாலைகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் நம்நாட்டுப் பெண்களால், நாட்டுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.

கல்வியைப் பொருத்தவரையில், நாங்கள் பல்கலைக்கழகக் கல்வி கற்ற காலத்தில் 3 ஆண்களுக்கு 1 பெண் என்ற நிலைமையே காணப்பட்டது. ஆனால் தற்போது, அந்நிலைமை மாற்றம்பெற்று, ஆண்களுக்குச் சமமாக, பெண்களும் கல்வி கற்கும் நிலை தோன்றியுள்ளது. இருந்தாலும், இன்னமும் பல நாடுகளில், பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்பட்டே வருகின்றது.

பெண்களுக்கான உள்ளூராட்சித் தேர்தலாயினும் சரி, நாடாளுமன்ற தேர்தலாயினும் சரி, நூற்றுக்கு 5.7 சதவீதமாகவே பெண்களின் பங்களிப்பு உள்ளது. அதனை 25 சதவீதமாக, நல்லாட்சி அரசாங்கம் மாற்றியுள்ளது. இது எதிர்காலத்தில், அவர்களுக்கான சமவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகுக்கும். பெண்கள் அரசியலில் மாத்திரமின்றி, அனைத்துத் துறைகளிலும் மிளிர வேண்டும்' என அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X