2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

'நாடாளுமன்றத்தில் ஜெனீவா தீர்மான விவாதத்தை தமிழ் எம்.பீக்கள் ஆளுமையுடன் பயன்படுத்த வேண்டும்'

Super User   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்திலே நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் பற்றிய விவாதத்தில்  அனைத்து தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்களும்  கட்டாயமாக கலந்துகொண்டு உண்மைகளை துணிச்சலுடனும் நேர்மையுடனும் எடுத்து கூறுவதன் மூலம் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள்  மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் பற்றிய விவாதம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கை நாடாளுமன்றத்தில் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் இரண்டு முழு நாள் விவாதம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
நடைபெற உள்ள விவாதம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய விவாதம் அல்ல.

இது ஜெனீவா தீர்மானம் பற்றிய விவாதம் ஆகும். இந்த விவாதத்தில் இரண்டு நாட்களும் கலந்துகொண்டு எமது நிலைப்பாடுகளை கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று ஆளுமையுடன் எடுத்து கூறும் கடப்பாடு தமிழ் மக்களால்  தெரிவுசெய்யப்பட்ட தமிழ் நாடாளுன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

இலங்கை வாழ் தமிழ் மக்களை திரும்பி பார்க்க மறுத்த சர்வதேச சமூகம் இன்று இலங்கை தமிழ் மக்களை திரும்பி பார்க்க தொடங்கி இருக்கின்றது. இதன் அடையாளம் தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம். இதனால் இன்று தமிழ் இனம் ஒரு வரலாற்று திருப்பு முனையில் நிற்கிறது. 

ஜெனீவா தீர்மானம் தொடர்பில், எமது உள்நாட்டு பிரச்சினை  உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையே  பெரும் மகா பாவ காரியமாக அரசின் இனவாத அரசியல்வாதிகள் திரும்ப, திரும்ப கூறி வருகிறார்கள். உண்மையில் நமது உள்நாட்டு மனித உரிமை பிரச்சினையை உலகத்திற்கு முதன் முதலில் கொண்டு சென்றது, அன்று எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இன்றைய அரசாங்கத்தின் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவார்.

தென்னிலங்கையில்  அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்தே மஹிந்த ராஹபக்ஷ ஜெனீவா போனார். அவருடன் அன்று கூட இருந்தது, இன்றைய அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் எமது இன்றைய ஜெனீவா பிரதிநிதி தமரா குணநாயகமும் தான். 

அன்று கொல்லப்பட்டது சிங்கள மக்கள். இன்று கொல்லப்பட்டது தமிழ் மக்கள். அன்று சிங்கள மக்களின் பிரச்சினை ஜெனீவா கொண்டு செல்லப்பட்டதை போலவே, இன்று தமிழ் மக்களின் பிரச்சினை ஜெனீவா போயுள்ளது. இந்த உண்மைகள்  நாடாளுமன்றத்தில் எடுத்து கூறப்பட வேண்டும்.

விடுதலை புலிகளின் மனித உரிமை மீறல்களை வரிசைபடுத்துவதன் மூலம் தமது தமது படுகொலைகளை மூடி மறைக்கவும் அரசின் இனவாத அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள். விடுதலை புலிகள் தொடர்பில் ஐக்கி நாடுகள் உட்பட உலக சமூகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதும்  உலகம் இலங்கை அரசின் போர் முயற்சிகளுக்கு முழுமையாக துணை நின்றதும் நாடாளுமன்றத்தில் எடுத்து கூறப்பட வேண்டும்.
 
போர் முடிந்த சில நாட்களின் பின் 2009 மே 26ஆம் திகதி  பயங்கரவாதத்தை முறியடித்தமைகாக என்று  கூறி இலங்கை அரசை பாராட்டி இதே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் 11ஆம் விசேட மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதன் பிறகு தேசிய நல்லிணக்கத்தை  ஏற்படுத்தும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளில்  தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கும் மீள்குடியேற்றங்களை நடத்தி  முடிக்கவும் போர் குற்றங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான விசாரணைகளை முன்னெடுக்கவும்  இலங்கை அரசு தவறிய காரணங்களினாலேயே  இன்றைய தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற அடிப்படை உண்மை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறப்பட வேண்டும்.
 
நடைபெற உள்ள விவாதம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய விவாதம் அல்ல. இது ஜெனீவா தீர்மானம் பற்றிய விவாதம் ஆகும். இந்த விவாதத்தில் இரண்டு நாட்களும் கலந்துகொண்டு எமது நிலைப்பாடுகளை, கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று ஆளுமையுடன் எடுத்து கூறும் கடப்பாடு தமிழ் மக்களால்  தெரிவுசெய்யப்பட்ட தமிழ் நாடாளுன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.  

  Comments - 0

  • சினோ கணேசன் Monday, 02 April 2012 04:31 AM

    நல்ல கருத்து. ஆனால் இப்படி முற்போக்காக சிந்திக்கும் நீங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் தம்பியை நிறுத்தியது ஏன்? உங்கள் கட்சியில் வேறு தகுதியான ஆட்கள் இல்லை? இப்படி தம்பியை உங்களுக்கு அடுத்த நாடாளுமன்ற உறுப்பினராக கைகாட்டுவது குடும்ப அரசியலின் ஆரம்பம் என நீங்கள் நினைக்கவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .