2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தமிழ்ச்சங்க வீதி விவகாரத்தை பிரபா எம்.பி. குரோத உணர்வுடன் குழப்புகிறார்: ராஜேந்திரன்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தமிழ்ச் சங்கம் ஒழுங்கை விவகாரத்தை பயன்படுத்தி பிரபா கணேசன் எம்பி, கொள்கைவழி நடக்கும் எமது தலைவர் பற்றி வாயில் வந்ததை எல்லாம் பேசியுள்ளார். இது இவரை பிடித்துள்ள ஒருவித நீண்டகால மனோவியாதி. உண்மையில் தான் ஏன் இன்றைய அரசாங்கத்தில் ஓடோடி  போய் இணைந்துகொண்டோம் என்பது பற்றிய சுயதெளிவுகூட இல்லாத இவர், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சம்பந்தமில்லா விடயங்களை பேசி தலைநகர தமிழ் மக்களை குழப்புகிறார்.

இது தொடர்பான கலந்தாலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த மேல்மாகாணசபை முதலமைச்சரை கலந்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தி, கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை விவகாரத்தை  குரோத உணர்வுடன் மென்மேலும் குழப்பி, கீழ்த்தரமான அரசியல் செய்ய வேண்டாம் என தமிழினத்தின் பெயரால் இவரை நான் மிகுந்த நல்லெண்ணத்துடன் கேட்டுகொள்கிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணசபை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரனின் பெயரை குறிப்பிட்டு, பிரபா கணேசன் எம்பி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளித்து எஸ்.ராஜேந்திரன் வெளிட்டுள்ள பதிலறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,   

நமது கட்சியின் மாநகரசபை உறுப்பினர் வேலணை வேணியன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை விவகாரம் தொடர்பாக முதலமைச்சரிடம் உரையாடி ஒரு கலந்துரையாடலை நடத்தும்படி, மாகாணசபை உறுப்பினர் என்ற முறையில் நான் கோரிக்கையை விடுத்தேன். இந்த அடிப்படையில், நேற்று நடைபெற்ற கூட்டம் முதலைமைச்சர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால்தான் அது முதலைமைச்சர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. நாம் ஏற்பாடு செய்திருந்தால் அது எமது கட்சி அலுவலகத்தில் அல்லவா நடத்தப்பட்டிருக்கும்? இந்த சிறு விடயம்கூட பிரபா கணேசனுக்கு புரியவில்லை. உண்மையில் நமது தலைவர் மனோ கணேசன் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தார். எனினும் இந்த விவகாரத்தில் தேவையற்ற அரசியலை புகுத்த கூடாது என்ற மிகுந்த நல்லெண்ணம் காரணமாக கலந்துகொள்வதை அவர் தானே தவிர்த்துகொண்டார். 

இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்த முதலமைச்சரை, கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் சிலர் தடுத்து நிறுத்தியுள்ளார்கள் என்பது எமக்கு தற்போது தெரியவந்துள்ளது. தனது அறிக்கையில், முதலமைச்சர் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டும் என பிரபா கணேசன் கூறுகிறார். இதன்மூலம் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் முதலமைச்சரை தடுத்து நிறுத்தியது இவர்தான் என்பது உறுதியாகின்றது. தலைநகர தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் இத்தகைய நபர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

அஸ்வர் எம்பி இந்த அரசாங்கத்தால் நேரடியாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டவர். ஆனால், பிரபா கணேசன் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளை எடுத்து பேசி, தலைவர் மனோ கணேசனின் பெயரை சொல்லித்தான் தேர்தலில் வாக்குகளை வாங்கினார் என்பது கொழும்பில் உள்ள சிறு குழந்தைக்குகூட தெரியும். பிறகு இரண்டே மாதத்தில் அதே அரசாங்கத்தில் சென்று இணைந்துகொண்டார். எனவே அஸ்வர் எம்பியைவிட, பிரபா கணேசனுக்குதான் கடப்பாடு அதிகம். நாங்கள் எங்கள் பாணியில் தீர்வு காண முயல்கிறோம். இவர் தனக்கு இயன்ற முறையில் இதற்கு தீர்வு காணவேண்டும். அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. முதலமைச்சரிடம் உரையாடியதாக பிரபா கணேசன் கூறுகிறார். அந்த உரையாடல் இந்த பிரச்சினைக்கு தீர்வு தேடுவதாக இருக்க வேண்டும். அதைவிடுத்து எமது முயற்சிகளில் தலையிட்டு அவற்றை சீர்குலைக்கும் கீழ்த்தரமான செய்கைகளை அவர் செய்யக்கூடாது.

தமிழ் சங்கம் ஒழுங்கை பெயரிடுவது தடுக்கப்பட்டது அப்பட்டமான இனவாத நடவடிக்கை. இனவாத நோக்கில் இந்த அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உண்மையில் இதற்கு இன்று ஒரு கலந்துரையாடலே தேவையில்லை. இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் அரசியல்வாதிகள் இது தொடர்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இதனால்தான்,  அரசாங்கத்தில் இருந்துகொண்டு இதை எதிர்த்து கண்டன அறிக்கைகளை விடுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பதை நாம் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி கூறுகிறோம்.

கோவில்கள், பள்ளிகள், தேவாலயங்கள், சிறுபான்மையினரின் கலாசார சின்னங்கள் தாக்கப்படாமல் இருப்பதை அரசாங்கத்தில் இருக்கும் தமிழ் பேசும் எம்பீக்கள் உறுதி செய்யவேண்டும் என எமது தலைவர் சொன்னார். இதில் என்ன தவறு? இது இன்று தமிழ் பேசும் மக்களின் ஒட்டுமொத்த மன உணர்வாகும். 

அரசாங்கத்தில் இடம்பெறும் தமிழ் பேசும் நபர்கள் குறைந்தபட்சம் இத்தகைய அப்பட்டமான இனவாத நடவடிக்கைகள் நடைபெறாமலாவது பார்த்துக்கொள்ளவேண்டும். இத்தகைய நடப்புகளை தடுத்து நிறுத்த இவர்களால் இன்று முடியவில்லை. இனியாவது நடந்துவிட்ட தவறை அரசாங்கத்தின் உள்ளே உரியவருக்கு எடுத்துகூறி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். அதைவிடுத்து, எமது கட்சியை பழித்து குரோத கருத்துகள் தெரிவித்து, ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதையும், தமிழ் மக்களால் மதிக்கப்படுகின்ற எமது தலைவரும், அவரது சகோதரருமான மனோ கணேசன் அவர்களைப்பற்றி காழ்ப்புணர்சியுடன் கருத்துகள் கூறுவதையும் பிரபா கணேசன் நிறுத்த வேண்டும்.

கொழும்பு தமிழ் சங்கம் விவகாரம், தமிழ் மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. அது இன்று கொழும்பு மாநகரசபையின் பிரச்சினையும் கூட என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள். மாநகரசபை சட்டபூர்வமாக நிறைவேற்றிய தீர்மானத்தை, மாகாணசபை காரணம் சொல்லாமல் தடுத்துள்ளது. மாகாணசபையின் ஆணையாளர் இது தொடர்பான தமது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்ததும் இது ஒரு முடிவுக்கு வரும். இந்நிலையில் இது தொடர்பான எந்த ஓர் அரசியல் போராட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற கொழும்பு மேயர் முசாமில் அவர்கள் எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க நாம் மிகுந்த அரசியல் நாகரீகத்துடன் இந்த விவகாரத்தை கையாள்கிறோம். முதலமைச்சரின் முடிவையடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமது கட்சி தீர்மானிக்கும்.

  Comments - 0

  • aroosh Wednesday, 05 December 2012 08:03 AM

    வாழ்க தமிழ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X