2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத்திட்டம்

George   / 2016 மார்ச் 15 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன் 

வடக்கு, தெற்கு ஊடகவியலாளர் இணைப்புப் பாலத்தின் ஒரு கட்டமாக, போரால் பாதிக்கப்பட்ட வடக்கு ஊடகவியலாளர்களில் மூன்று பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டம், எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. 

ஊடகத்துறை அமைச்சின் ஒருங்கிணைப்பாளர் காமினி, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், யாழ். ஊடக அமையம், ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு அமைப்பு ஆகியன இணைந்து, யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (14) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 

'வடக்கு, தெற்கு ஊடகவியலாளர்களுக்கு இடையில் கடந்த காலங்களில் இடைவெளி காணப்பட்டது. அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்துக்கான அமைப்பு, ஊடக அமைச்சின் அனுசரணையில் இந்தச் செயற்றிட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை அமைச்சுக்குத் தெரியப்படுத்தி, அவர்களுக்கான செயற்றிட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன. இது முதலில் வடக்கிலும் பின்னர், கிழக்கிலும் முன்னெடுக்கப்படும். 

எதிர்வரும் 26ஆம் திகதி தெற்கைச் சேர்ந்த மூவின ஊடகவியலாளர்கள்,; வடக்கை நோக்கி ரயிலில் பயணிப்பார்கள். ஊடகவியலாளர் குழு, முதலில் அநுராதபுரம் பின்னர் வவுனியா, கிளிநொச்சி என சந்திப்புக்களை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளது. இந்தக்குழுவுடன் ஊடக அமைச்சர் கஜந்த கருணாதிலக்கவும் இணைந்துகொள்வார்.

யாழ்ப்பாணத்தில், வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, மதகுருமார்கள், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை இந்த ஊடகவியலாளர்கள் சந்திக்கவுள்ளனர்.

மறுநாள், யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக நிறுவனங்களுக்கு விஜயம் செய்து பார்வையிடுவதுடன், யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு மொழிவளர்ப்பு தொடர்பான நூல்களையும் அன்பளிப்பாக வழங்கவுள்ளனர். 

தொடர்ந்து பலாலியில் முப்படைகள் மற்றும் பொலிஸார் ஆகியோரின் உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். 
கொடிகாமம் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டத்தில் 3 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். 

அத்துடன், ஊடக அமைச்சால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் இலகு கடன் மோட்டார் சைக்கிள்கள் சாவகச்சேரியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும்.' என்று இதன்போது தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .