2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அச்சுவேலி முக்கொலை வழக்கு: மேல் நீதிமன்றுக்கு மாற்றம்

Kogilavani   / 2017 மார்ச் 21 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

       -எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைப் படுகொலை செய்தும், மேலும் இருவரை கொலை செய்ய முயற்சித்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்த நபருக்கு எதிரான வழக்கு விசாரணை, சட்டமா அதிபரால், யாழ். மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதி, அச்சுவேலியைச் சேர்ந்த பொன்னம்பலம் தனுஜன் என்பவர், நிற்குணாநந்தன் அருள்நாயகி, இவரது மகள் யசோதரன் மதுஷா மற்றும் மகன் சுபாங்கன் ஆகியோரைக் கொலை செய்ததுடன்,  தனுஜன் தர்மிகா மற்றும் தங்கவேல் யசோதரன் ஆகியோரை கொலை செய்ய முயற்சித்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இவருக்கு எதிரான வழக்கு விசாரணையானது யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று, அவ்வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர், இவ்வழக்கு விசாரணையை யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கானது, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் திங்கட்கிழமை (20) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கை அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நெறிப்படுத்தியிருந்தார். அத்துடன், இவ்வழக்கில் அரச தரப்பு சாட்சியாக 14 பேர் இணைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எதிரிக்கு மன்றில் குற்றப்பகிர்வுப் பத்திரமானது, தமிழில் வாசித்துக் காட்டப்பட்டதுடன், அது எதிரிக்கு வழங்கப்பட்டும் இருந்தது. அதனைத் தொடர்ந்து, வழக்கின் சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக, இவ்வழக்கு விசாரனையை, இம்மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .