2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

’அடிப்படை உரிமையை இழந்து நிற்கின்றோம்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

சர்வதேச  மனித உரிமைகள் நாளில், எமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமையை கூட  இழந்து நிற்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

சர்வதேச மனிதஉரிமைகள் நாளில் முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டத்தின் இறுதியில், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின்  உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள மகஜரிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். 

அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளாதாவது,  “இலங்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் மிகுந்த விரக்தியுடனும் ஏமாற்றங்களுடனும் தங்கள் மனச்சாட்சிகளின் முன் இந்த அறிக்கையை முன்வைக்கின்றோம்.

“இன்றைய நாள், சர்வதேச மனித உரிமைகள் நாள், உலக சமுதாயத்தின் மனச்சாட்சிகளை மீண்டும் கேள்விக்குட்படுத்தும் நாள். வரலாற்றின் துயரம் மிகுந்த பக்கங்களை சர்வதேச மனித உரிமைகள் நிறுவனங்கள் மீள்பரிசீலனைகளை மேற்கொண்டு, அடக்குமுறைகளுக்குள்ளான நாடுகளில் ஓர் இனம் இன்னோர் இனத்தின் மீது மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் போது அவ்வாறான விடயங்களில் எல்லைகளற்று தலையீடு செய்ய வேண்டியதும், ஏற்கெனவே தீர்க்கப்படாத மனித உரிமைப் பிரச்சினைகளிளை தீர்த்துவைப்பதற்குமான  நாளாகவே நாங்கள் கருதுகின்றோம்.

“அந்த வகையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமாகிய நாம், தங்களிடம் உருக்கமாகவும், துயரத்துடனும் வேண்டிக்கொள்வது, முன்னர் எப்போதும் போல் அல்லாது தற்போதுள்ள ஆட்சியாளர்களால் தனி மனித அடிப்படை உரிமைகள் ஒன்று கூடல் வெளிப்படுத்துதல், இறந்தவர்களை நினைவு கூருதல், என்பவற்றோடு தமிழ் மக்களின் பண்பாடு கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளுக்கு (உதராணமாக காத்திகை தீப திருநாள்) திட்டமிட்டே தடைகளை ஏற்படுத்தி கைது செய்தல் என எமது அடிப்படை உரிமைகளை அடக்கி வருகின்றது. 

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஐ.நா அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட OMP விசாரணை அமைப்பின் விசாரணைகள் கூட வழமையான விசாரணை அமைப்புக்களின் விசாரணைகளைப்போலவே கண்துடைப்பாகவே முடிந்திருக்கின்றது.

“11 ஆண்டுகள் கடந்த பின்னரும் எங்களுக்கு இருக்கின்ற இறுதி நம்பிக்கையாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, சர்வதேச மனித உரிமை ஆணையம் என்பவற்றை இன்றுவரை உறுதியாக நம்புகின்றோம். எனவேதான், இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து எம்மீது திணிக்கப்படும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும், நியாயமற்ற விசாரணைகளுக்கும் மத்தியிலும் நாம் தொடர்ந்தும் நீதி வேண்டி நிற்கின்றோம். 

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் குடும்பத் தலைவர்களை இழந்தவர்களின் நிலைமை கடந்த காலங்களிலும் விட தற்போது இன்னும் மோசமான நிலையில் பல்வேறு சமூக சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். குடும்ப தலைமையேற்ற பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுவரும் பலவித சமூகத் தாக்குதல்களுக்கும் வறுமைகளுக்கும் மத்தியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தங்கள்  குழந்தைகளை பார்க்கவும் கல்வி வழங்கவும் சொல்ல முடியாத துயரங்களை தாண்டியே சமூகத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர். 

“இலங்கை அரச புலனாய்வுத் துறையின் தொடர் அச்சறுத்தல்களால் இவர்களும், இவர்களின் பிள்ளைகளும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

“எமக்கான நீதியானது, இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்காது என்பதுடன், எமக்கான சரியான பதிலை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத்தரவேண்டிய பொறுப்பும் ஐக்கிய நாடுகள் மன்றத்தையும், சர்வதேச சமுதாயத்தையும் சார்ந்தது என மீண்டும் ஆணித்தனமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

“ஆகவே, தங்களின் விரைவான நடவடிக்கையாக சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவோ அல்லது சிறப்பு தீர்ப்பாயத்தினுடாகவோ நீதி வழங்க நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்த்து நிற்கின்றோம்” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X