2025 ஜூலை 21, திங்கட்கிழமை

அபிவிருத்தி நன்கொடை நிதியில் 96.66 சதவீதம் செலவு

Gavitha   / 2016 ஜனவரி 04 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண விவசாய அமைச்சுக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டிருந்த மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில், 99.66 வீதம் செலவழிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்; நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டு விவசாய அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கென மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக, 193 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிதி, விவசாயத் திணைக்களத்துக்கு 90.84 மில்லியன் ரூபாய், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 52.36 மில்லியன் ரூபாய், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 43.8 மில்லியன் ரூபாய், கூட்டுறவுத் திணைக்களத்துக்கு 6 மில்லியன் ரூபாய் என்ற வகையில்; பிரித்து வழங்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்குரிய நிதிநிலை அறிக்கையின்படி ஒதுக்கப்;பட்ட நிதியில் 192.34 மில்லியன் ரூபாய், செலவழிக்கப்பட்டுள்ளது.

பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக விவசாய அமைச்சுக்கும் அமைச்சுக்குட்பட்ட திணைக்களங்களுக்கெனவும் 14.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிதி, விவசாய அமைச்சுக்கு 8 மில்லியன் ரூபாய், விவசாயத் திணைக்களத்துக்கு 2.5 மில்லியன் ரூபாய், நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றுக்குத் தலா 1 மில்லியன் ரூபாய் என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2015 டிசெம்பர் 31ஆம் திகதி நிதிநிலை அறிக்கையின்படி இந்நிதி முழுமையாக, அதாவது 100 சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சுக்கும் அதன் கீழுள்ள திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்ட இந்நிதியில் எதுவும் அவசரம் அவசரமாகச் செலவழித்து முடிக்கப்படவில்லை.

ஆண்டுத் தொடக்கத்தில் திட்டமிட்டவாறு கருத்திட்டங்கள் யாவும் எவ்வித மாற்றமும் இன்றி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கால எல்லையில் பூரணமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணசபைக்குரிய நடப்பு 2016ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், விவசாய அமைச்சுக்கும் அதற்குரிய திணைக்களங்களுக்கெனவும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியாக 410 மில்லியன் ரூபாயும், பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியாக 26.5 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டைப்போன்றே, இந்நிதியிலும் எதுவும் வீண்போகாத வகையில் திட்டமிடப்பட்டுள்ள கருத்திட்டங்கள் யாவும் உரிய காலத்தில் வினைத்திறன் மிக்கதாக  நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X