2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘அரசாங்கம் வாக்குறுதியை மீற முடியாது’

Gavitha   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்ற உண்மையை, அரசாங்கத்துக்கு கூறியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை க்குழு கூட்டம், வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில், நேற்று (03) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்தவாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியையும் இணைத்து, தெளிவான ஒரு கலந்துரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது என்றும் இங்கேயுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல்கட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரது தரப்பும் இணைந்து, மார்ச் மாதத்தில்  இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைபேரவை அமர்வில், பொதுவான நிலைப்பாடு ஒன்றை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அது தொடர்பாக அனைத்து தரப்புகளிடமும் கலந்துரையாடி ஒரு வரைபை தயாரித்து, அந்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும்  அவர் கூறினார்.

இதேவேளை தன்னால் தயாரிக்கப்பட்டது என்று, கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட  வரைபு, புலம்பெயரந்த அமைப்புக்களால் வரையப்பட்டது என்றும் பின்னர் அதற்கு விக்கின்னேஸ்வரன் ஐயா அனுமதியை வழங்கியிருப்பதாக, மின் அஞ்சல் ஒன்றைத் தான் கண்டதாகவும் அவர் கூறினார்.

“அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ள யோசனைகளில், மாகாணசபை  பற்றி, தீர்க்கமாக எழுதியிருக்கிறோம். மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு இடங்கொடுக்க முடியாது. அதிலே பாரிய பின்விளைவுகள் உள்ளது. இலங்கை, வெவ்வேறு ஜனாதிபதிகளின் கீழ், சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் தங்களது வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள். அதை எல்லாம், மீறி இலங்கை அரசாங்கம் செயற்படமுடியாது என்ற உண்மையை அவர்களுக்குக் கூறியுள்ளோம். அதையும் மீறி இலங்கை அரசாங்கம் செயற்பட்டால், எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை எடுப்போம்” என்றும் இதன்போது அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .