2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு ; பொலிஸார் மீது சந்தேகம்

Janu   / 2023 நவம்பர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வட்டுக்கோட்டை - பொன்னாலை சந்தியில் அண்மையிலுள்ள புதர் ஒன்றிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலமொன்று சனிக்கிழமை (18) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்  ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர் கடந்த 14ஆம் திகதி பொன்னாலை கிராம சேவகர் அலுவலகத்தை சேதப்படுத்தும் விதத்தில் செயற்படுகின்றார் என ஊர் மக்கள் கிராம சேவகருக்கு தெரிவிததையடுத்து கிராம சேவகர் இது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பொலிஸார், அவரை அழைத்துச் சென்றதாகவும் கிராம சேவகருக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை (18)  ஊடகவியலாளர் ஒருவர் குறித்த பகுதிக்கு சென்று சடலத்தை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தபோது, பொலிஸாரால்  புகைப்படம் எடுக்க வேண்டாம் என மிரட்டும் தொனியில் தடுத்துள்ளனர்.

குறித்த ஊடகவியலாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கடந்த 14ஆம் திகதி பொன்னாலை கிராம சேவகரின் அறிவித்தலின் பேரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றீர்களா? அவ்வாறு அழைத்துச் சென்றால் அவர் எங்கே? என வினவியுள்ளார். அதற்கு "அது தொடர்பாக எதுவும் தெரியவில்லை" என பொலிஸார் பதில் வழங்கியுள்ளனர்.

உயிரிழந்தவரை அழைத்துச் சென்றதாக கிராம சேவகருக்கு கூறிய பொலிஸார், அவரை பற்றி தெரியாது என ஊடகவியலாளருக்கு கூறியது மற்றும் புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க விடாமல்  தடுத்தது போன்ற விடயங்கள் வட்டுக்கோட்டை பொலிஸார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X