2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

ஆள்கொணர்வு மனுவில் கோட்டாவின் பெயர் இணைப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

லலித் மற்றும் குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுவில் சாட்சிகள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோட்டாபய ராஜபக்ஷ, கருணாரட்ண ஹெட்டியாராட்சி ஆகியோரின் பெயர்கள், நேற்று (08) மனுதாரர்களால் இணைக்கப்பட்டது.

எனினும், அவர்கள் இருவரையும் சாட்சியமளிக்க அழைக்குமாறு மனுதாரர்களின் சட்டத்தரணியால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோரப்படவில்லை.

2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், யாழ்ப்பாண நகரில் நடத்த திட்டமிடப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பாக, அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாணையின்போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின. 
இந்த நிலையில், இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

மனுவின் சாட்சியாளர்கள் பட்டியலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்கள் கோட்டாபய ராஜபக்ஷ, கருணாரட்ண ஹெட்டியாராட்சி ஆகியோரின் பெயர்களும் இணைக்கப்பட்டன.

இருப்பினும், அவர்கள் இருவரையும் சாட்சியமளிக்க அழைக்குமாறு, மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்யவில்லை.

இதையடுத்து, வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X