2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

இனியாவது நீதியான தீர்வு ​​வேண்டும்

Princiya Dixci   / 2017 மார்ச் 29 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

“எமது கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தப்பட்டால் நாங்கள் எமது போராட்ட வடிவங்களை மாற்றி சகல இடங்களிலும் போராட்டங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்” என, காணாமலாக்கப்பட்டேரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் காணாமற்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், அவசர கலந்துரையாடலொன்று முதலமைச்சரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்றிருந்தது. இக் கலந்துரையாடலில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே காணாமற்போனோரின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அங்கு மேலும் தெரிவித்ததாவது, “முதலமைச்சர் எங்கள் மனோ நிலையை புரிந்துகொண்டுள்ளார். கடந்த பல நாட்களாக எங்களுடைய உறவுகளை தேடுவதற்காகவும் உறவுகளது விடுதலைக்காகவும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எங்கள் போராட்டம் பல நாட்கள் கடந்து வாரங்கள் முடிந்து மாதங்கள் ஆகின்ற நிலையிலும் எமக்குத் தீர்வுகள் எவையும் எட்டப்படவில்லை.

இனியாவது எமக்கோர் நீதியான தீர்வு கிடைக்க வேண்டுமென்று நாம் மீளவும் வலியுறுத்திக் கேட்க விரும்புகின்றோம். மறைமுகமான தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளில் எங்கள் உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான முகாம்களுக்கு எங்களை அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இது தான் எமது கோரிக்கையாக இருக்கின்றது. ஆனாலும் எமது கோரிக்கைகள் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தப்பட்டால் நாங்கள் எமது போராட்ட வடிவங்களை மாற்றி சகல இடங்களிலும் போராட்டங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானித்திருக்கின்றோம்.

 எங்களுடைய பிரச்சனைகளைக் கேட்டறிந்துள்ள முதலமைச்சர், இவை தொடர்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் எம்மிடம் தெரிவித்துள்ளார். இதனூடாக எமக்குத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றும் காணாமற்போனோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .