Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
“2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்களின் வீரத்தைக் கண்டு பீதியடைந்திருந்தவர்கள், தற்போது வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பலவாறாக அறிக்கைகளையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வாறு இரத்த ஆறு ஓடும் என எம்மாலும் கருத்துகளைத் தெரிவிக்க முடியும்” என, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் சமஷ்டியைக் கோரினால் வடக்கு - கிழக்கில் இரத்த ஆறு ஓடும் எனவும் தமிழர்கள் சமஷ்டி கோருவது தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு, வியாக்கியானங்களைக் குப்பையில் போடுமாறும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ராவண பலய அமைப்பின் பொதுச்செலாளர் இத்தானந்தே சுகத தேரர், தேசிய பௌத்த புத்திஜீவிகள் சங்க சபையின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் சில தினங்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில், இன்று (22) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே, தேரர்களின் இத்தகைய கருத்துத் தொடர்பில், இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் யாரும் இவ்வாறான அறிக்கைகளையோ, கருத்துகளையோ வெளியிடுவதில்லையெனவும் ஏன் எனில் தமிழர்களின் வீரத்தைப் பார்த்து அனைவரும் பீதியடைந்திருந்தனரெனவும் கூறினார்.
இந்நிலையில், தற்போது இவ்வாறான கருத்துகளைத் தெரிவிக்கும் சில பிக்குக்கள் மனநோயாளிகளாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், அல்லது சில சிங்கள அரசியல் தலைவர்களின் தூண்டுதலில்தான் அவர்கள் இவ்வாறான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர் என எண்ணுவதாகவும் கூறினார்.
தங்களுடைய சமயத் தலைவர்கள் இவ்வாறு அபத்தமாக பேசுவதில்லையெனத் தெரிவித்த அவர், மதத்துக்குரிய மரியாதை, பண்புதான் அங்கே வெளிப்படுத்தப்படுகின்றதெனவும் கூறினார்.
“ஆனால், பிக்குகள் சிலர் பௌத்தத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றனர். பௌத்த சமயத் துறவிகள் சிலர் மாத்திரமே இப்படியான அபத்தமான பேச்சுகளை பேசுகின்றனர்.
“குறிப்பாக சிங்கள அரசியல் தலவர்களுள் ஒருவரான விக்கிரமபாகு கருணாரத்ன, தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். சில பௌத்தத் துறவிகளும் இதே கருத்துப்பட ஏற்கெனவே தெரிவித்திருக்கின்றார்கள்” எனவும் அவர் கூறினார்.
“அரசாங்கம், மற்றும் அரசாங்கத் தலைவர்கள் இவ்வாறு வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்ற கருத்தைத் தெரிவிப்பவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் எப்படியும் பேசலாம் என்றிருந்தால், நாமும் இவ்வாறு பேசவேண்டி ஏற்படும்.
“இரத்த ஆறு ஓடும் என்று எம்மால் கூற முடியாதா? 2009க்கு முன்னர் தமிழனின் வீரத்தை இந்த உலகே அறிந்திருந்தது. மேலும் தமிழர்கள் சமஷ்டிக்காகப் போராடுவது சட்ட ரீதியாகத் தவறல்ல. அதற்கு அப்பால் அப்படி சமஷ்டி கேட்டுப் போராடுவதற்கு, ஒரு மக்கள் கூட்டம் என்ற வகையில் தமிழர்களுக்கு உரிமையுண்டு” எனவும் ரவிகரன் தெரிவித்தார்.
அத்துடன், சமஷ்டி பிரிவினையைக் குறிக்கவில்லை என உயர் நீதிமன்றமும் ஒரு தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறதெனத் தெரிவித்த அவர், இந்நிலையில் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பையும் வியாக்கியானங்களையும் குப்பையில் போடுங்கள் என்பது மனநோயின் உச்சகட்டமாகுமெனவும் கூறினார்.
எனவே, தமிழ் மக்களாகிய எம் அனைவரது உரிமைக் குரல்களும் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதற்கு, தமது வாக்குகளால், தமக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago