2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இருபது வருடங்களாக ஆளணி உருவாக்கம் இல்லை

Editorial   / 2017 ஓகஸ்ட் 31 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன் 

“வடக்கில், இருபது வருடங்களாக ஊழியர்கள் ஆளணி உருவாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், இருபது வருடங்களுக்கு முன் காணப்பட்ட சனத்தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட் ஆளணியினரே தற்போதும் பணியாற்றி வருகின்றனர்” என, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அச்சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்தனர். 

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“இந்த இருபது வருடங்களில் ,சனத்தொகை அதிகரித்திருக்கிறது. பிரதேச சபைகள் நகர சபைகளாக அங்கிகரிக்கப்படவில்லை என்றாலும், அந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது. தேவைகளும், சேவைகளும் அதிகரித்துள்ளது. இப்படி எல்லாம் அதிகரித்த நிலையில் காணப்பட, ஊழியர்களின் ஆளணி மட்டும் பழைய நிலையிலேயே உள்ளது. இதனால், இருக்கின்ற ஊழியர்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். 

“மேலும், ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. பல வெற்றிடங்களுக்கு ஆளணி நிரப்படவில்லை. இந்த நிலைமை நீண்ட காலமாக தொடர்கிறது. 

“வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில், முதலமைச்சரின் கவனத்துக்கு மேற்படி விடயம் தொடர்பில் பல தடவைகள் கொண்டு சென்ற போதும், அவரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் இன்னும் ஒரு வருடமும் ஒரு மாதமுமே இருக்கிறது. இந்தக் காலத்துக்குள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிகையில்லை. 

“தற்போதைய நிலைமைக்கு ஏற்ப ஆளணி உருவாக்கம் செய்யப்பட்டு, ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்களாக இருந்தால், சுமார் மூவாயிரம் பேருக்கு வடக்கில் வேலைவாய்பபை பெற்றுக்கொடுக்க முடியும்” என்றனர். 

இதில், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் உப தலைவர் அ.அன்டனி, நிர்வாக ஆலோசகர் செ.இராசையா, கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா இணைப்பாளர்களான ஆ.புண்ணியமூர்த்தி, சி. சற்குணராஜா, ந.தேவகிருஸ்ணன், ஆ.சூரியகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X