2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

’இளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை’

எம். றொசாந்த்   / 2018 ஜூலை 17 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் பெண்ணொருவரின் தற்கொலைக்கு, சட்டத்தரணி ஒருவரே காரணமென முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, குற்றப்புலனாய்வும் திணைக்களத்துக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த விவகாரம் தொடர்பில், ஏற்கெனவே விசாரணைகளை நடத்திய யாழ்ப்பாணப் பொலிஸ் தலைமையகக் குற்ற விசாரணைப் பிரிவு முன்வைத்த விசாரணை அறிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட யாழ்ப்பாணம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, குற்றப்புலனாய்வும் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் - அரியாலையைச் சேர்ந்த  நாகேஸ்வரன் கௌசிகா (வயது 23) என்ற இளம் பெண், கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதியன்று உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - மருதடியிலுள்ள தனது நண்பியின் இல்லத்திலிருந்து, அவரது சடலம் மீட்கப்பட்டது.

குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் அதற்கு முன்னர் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதமொன்றை, யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண், கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான போதிலும், வீட்டின் வறுமைச் சூழ்நிலை காரணமாக, பல்கலைக்கழகம் செல்லவில்லையென, குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், யாழ். மாவட்ட விழப்புலனற்றோவர் சங்கத்தில் கடமையாற்றிவந்த கௌசிகா எழுதியுள்ள கடிதத்தில், அந்தச் சங்கத்தின் தலைவரும் சட்டத்தரணியுமானவர் தான், தனது தற்கொலைக்குக் காரணமெனக் குறிப்பிட்டிருந்தாரென, பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சட்டத்தரணியிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இளம் பெண்ணின் குற்றச்சாட்டுத் தொடர்பான உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .