2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

‘எனது கணவர் போராளி அல்லர்’

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 27 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வராசா ஜயந்தன் (வயது 39) என்பவர் எனது கணவர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அவர், இருந்தது கிடையாது. அவர் ஒரு முன்னாள் போராளி எனக் கூறுவது வதந்தி. எனது கணவர் இதைத் (துப்பாக்கிச் சூட்டை) தெரியாமல் செய்துவிட்டார்” என்று, அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.  

கடந்த சனிக்கிழமை (22) நல்லூர் தெற்கு வீதியில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில், இருவர் கைதுசெய்யப்பட்டனர்.  

பிரதான சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (25) காலை சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தமை தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், 

‘சவாலுக்காகவே துவக்கை எடுத்தேன்’

சனிக்கிழமை நல்­லூ­ருக்குப் பின் வீதியில் உள்ள எனது வீட்டில் மது அருந்திவிட்டு, அந்­தச் சந்தியில் (பருத்தித்துறை வீதி , கோவில் வீதி சந்தி ) வந்து நின்றோம். அப்போது, கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவரைக் காட்டி “ உனக்குத் தைரி­யம் இருந்தா அவன்ர துவக்கை எடுத்துச் சுடடா பார்ப்பம்” என்று எனது மச்சான் சவால் விட்டான். அப்போது நான் பொலிஸாரின் துவக்கை எடுக்­கேக்க அது தெரியாமல் சுடுட்டு விட்­டது.  

‘ஸ்கூட்டரைப் பறித்தேன்’

அதன் பின்னர் பிஸ்டலைக் காட்டி வீதியால் வந்தவரது ஸ்கூட்டரைப் பறித்து. ஸ்கூட்டரில், ஆடியபாதம் வீதி ஊடாக கல்வியன் காட்டுப் பகு­திக்குச் சென்று அங்கிருந்து அரியாலைக்குச் சென்றேன்.  

அரியாலை பேச்சி அம்மன் கோயிலுக்குப் பின்னால் ஸ்கூட்ட­ரைப் போட்டு விட்டு திருநகர் பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டுக்குச் சென்றேன்.  

‘மயானத்தில் இரவை கழித்தேன்’

அங்கு பெரியம்மாவிடம், போதை­யில் பொலிஸ் ஒருவருக்கு அடித்து விட்டேன். பொலிஸ்
என்­னைத் தேடுகிறது எனச் சொல்லி. பெரியம்மா வீட்­டி­லேயே உடையை மாற்­றி­விட்டு ஓட்டுமடம் பகுதியில் உள்ள கோம்பயன்மணல் சுட­லை­யில் தான் அன்­றைய இரவைக் கழித்தேன். 

‘சரணடைந்தேன்’

மறு­நாள் பகல் நாவந்து­றையில் உள்ள உற­வினர் வீட்­டில் நின்றேன். அன்றிரவு கொட்டடியில் உள்ள மாமாவின்  

வீட்­டுக்குச் சென்றேன். நல்­லூரில் நடந்த சம்பவத்தை மாமா அறிந்து வைத்திருக்க வேண்­டும். ஏனெனில், என்னை அங்கு கண்டதும் மாமா உடனடயாக எனது அப்பாவுக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் வந்ததைக் கூறி­னார். மாமா என்னைப்பொலிஸில் சரணடையுமாறு
கூறினார்.

அதன்படி மாமாவுடன் வந்து பொலிஸில் சரணடைந்தேன் என பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் எனப் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

சந்தேக நபரின் உடைகள் மீட்பு

அதன் பின்னர் செவ்வாய்க்கிழமை குறித்த நபரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், திருநகரில் உள்ள சந்தேகநப­ரின் பெரியம்மா வீட்டுக்குப் பொலிஸ் வாகனத்தில் கறுப்புத் துணியால் மூடிய நிலையில் சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டார்.  

துப்பாக்கிச் சூடு நடத்தும்போது அணிந்திருந்த உடைகள் உள்­ளிட்ட சில பொருட்களை அங்கு பொலிஸார் மீட்டனர்.  

8ஆம் திகதி வரையில் விளக்கமறியல்

குறித்த சந்தேகநபர் யாழ். பொலிஸாரினால் யாழ். நீதவானின் உத்­தியோகபூர்வ இல்லத்தில், செவ்வாய்க்கிழமை முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X