2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆண்டறிக்கைக்கு வரவேற்பு

Menaka Mookandi   / 2016 ஜூலை 04 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொறுப்புக்கூரலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 2016ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை, வரவேற்கின்றோம். மனித உரிமை ஆணையாளர் மேதகு ஹுஸைன், தன்னுடைய இலங்கை தொடர்பான அவதானங்களை 38 முக்கிய பகுதிகளாக கடந்த 2016 ஜூன் 28 அன்று ஜெனீவாவில் வெளியிட்டிருந்தமை மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையின் சாதாரண பொதுமக்களாகிய எமக்கு நம்பிக்கையூட்டுவதாகவே அமைந்திருக்கின்றதென வடக்கு முஸ்லிம் சிவில் சமூகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சமூகம், அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள், இலங்கை அரசாங்கம், குறிப்பாக 2015 ஜனவரி 8ற்குப் பின்னர் ஓரளவிற்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் செயற்பட்டிருப்பதாக இருப்பினும், இன்னும் முன்னேற்றகரமாக செயற்படுவதற்கான தேவையினை உணர்த்தி நிற்கின்றன.

கடந்தகால கசப்பான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் கதைத்துக் கொண்டிருப்பதைவிடவும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளினூடாக இழப்புகளை ஈடுசெய்யப்படுவதை நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தவகையில், வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில், இலங்கை அரசாங்கமும் வடக்கு மாகாணசபையும் திருப்திகரமான முன்னெடுப்புகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நிறுவி, அதன் மூலம் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத்தான தீர்வு முன்மொழிவுகளை முன்வைக்க முடியும் என்றும் அத்தகைய தீர்வு முன்மொழிவுகள், கொள்கை ரீதியானதும் நடைமுறைசார்ந்த திட்டமிடல் ரீதியானதுமாக இருத்தல் அவசியம் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அதனையே மீண்டும் இங்கும் வலியுறுத்துகின்றோம்.

எனவே, மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று இலங்கையின் பொறுப்புக்கூரலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் செயற்பாடுகளில் நம்பிக்கைதரும் விதத்தில் அனைத்துத் தரப்பினரும் தமது பற்றுருதியோடு செயற்படவேண்டும். அதனூடாக எமது நாட்டுக்கும் எமது மக்களுக்கும் நன்மை தருகின்ற ஒரு நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்கின்ற வடக்கு முஸ்லிம்கள் சார்பான எமது நிலைப்பாட்டினை இத்தால் வெளிப்படுத்துகின்றோம்' என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X