2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோபமடைந்த சி.வி.கே

George   / 2016 மே 31 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (31) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எதிர்காலத் திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் தொடர்பில், திட்டத்தை மேற்கொள்ளும் அதிகாரிகளால் அனுமதி கோரப்பட்டது. இதற்காக திட்டங்கள் தொடர்பான கையேடு, கலந்துகொண்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது.

இதில் செங்குந்தா சந்தை கட்டடம் 25 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அது தொடர்பில் போதிய விளக்கம் கையேட்டில் கூறப்படாமையால், அது தொடர்பான விளக்கத்தை அவைத்தலைவர் வினாவினார்.

'இந்த விடயம் திட்டமுன்மொழிவுக்கான விடயம், தவறுதலாக திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயங்களுக்குள் உள்ளடங்கப்பட்டுள்ளது. இதனைப் பெரிதுபடுத்த வேண்டாம்' என மாவட்;டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் கூறினார். 

இதே கூற்றை விஜயகலா மகேஸ்வரனும் கூறியதுடன், 'தவறுதலாக இங்கு அச்சிடப்பட்டுள்ளது, பெரிதுபடுத்தாதீர்கள்' எனக்கூறினார்.

எனினும், கோபமடைந்த சிவஞானம், 'எங்களுக்கு கதைக்க உரிமையில்லையா? கருத்துக்களை தெரிவிக்க முடியாதா?. அனுமதிக்காக தந்துள்ளீர்கள்.தற்போது திட்டமுன்மொழிவு இல்லை என்று கூறுகின்றீர்கள். இந்த மாறுபட்ட பேச்சு ஏன்?' என்றார்.

வாக்குவாதத்தையடுத்து, செங்குந்தா சந்தை விடயம் தவிர்ந்து ஏனைய அபிவிருத்தி விடயங்களுக்கு அனுமதி வழங்குவதாக அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X