2025 மே 01, வியாழக்கிழமை

’கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும்’

Niroshini   / 2021 ஜனவரி 07 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை - இந்திய மீனவர்கள்; தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில், இந்தியாவின் அக்கறை வெளிப்படுத்தப்பட்டிருந்ததாகவும், அவர் கூறினார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெயசங்கருக்கும் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (06) நடைபெற்றது.

இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த காலங்களில் இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களையும் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுதலை செய்து, சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பற்கான நடவடிக்கை தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிவித்தார்.

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான உதவிகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில், குறித்த கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்தார் எனவும், டக்ளஸ் கூறினார்.

இதேவேளை, இழுவை வலை படகுத் தொழிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள குறித்த தொழில் முறையால் இரண்டு நாடுகளின் கடல் வளங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சருக்குத் தெளிவுபடுத்;தியதாகவும் கூறினார்.

தங்களது கருத்துகளைக் கேட்டுக்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர், குறித்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு சுமூகமான தீர்வை காண்பதாக உறுதியளித்தார் எனவும், டக்ளஸ் தெரிவித்தார்.

அத்துடன், அரபிக் கடலுக்கு செல்லுகின்ற இலங்கையின் ஆழ்கடல் பல நாள் கடற்றொழிலாளர்களுக்கான குறுகிய தூரத்தைக் கொண்ட மாற்று வழியாக இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இந்தியக் கடற் பரப்பை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கையையும், பரிசீலிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .