2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கடல் நீரை குடிநீராக்காதே: வடமராட்சி கிழக்கில் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடல் நீரை குடிநீராக்கி, யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு பல்கலைக்கழக  மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் வடமராட்சி அபிவிருத்தி ஒன்றியம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் அனுசரணையிலும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

'தாளையடி கடற்கரையில் இருந்து எமது பிரதேசத்தை ஒருமுறையேனும் திரும்பிப்பார், வடமாகாண சபையே ஏன் எம்மை கொல்லத்துடிக்கிறாய், அரசியல்வாதிகளே தவறிழைக்காதீர்கள், வடமராட்சி கிழக்கை ஒதுக்காதே, எமது வளங்கள் எமக்கு வேண்டும், அலை அடிக்கும்  கடலில்  அனல் அடிக்க வைக்காதே, ஆசிய அபிவிருத்தி  வங்கியே  உயிர்ப்பலி  எடுக்கவா  பணத்தை  கொடுக்கிறாய்' போன்ற கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை தாங்கியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கடல்நீரை நன்னீராக்கும் இந்தத் திட்டத்தினால், கடல் அதிகளவில் உப்பாவதாகவும் இதனால் மீனவர்கள் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்படுவதாகவும்  மீன் பிடியையே  முற்றுமுழுதாக  நம்பி  வாழ்க்கையை நடத்தி வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடும்பங்களின் நிலை என்னவாகும் போன்ற கோஷங்களும் இதன்போது எழுப்பப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரனுடன் கலந்துரையாடியிருந்ததுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கான மகஜரொன்றையும்  யாழ்.  மாவட்ட  அரசாங்க  அதிபருக்கு  வழங்குவதற்கான மகஜர் ஒன்றிறையும் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X