2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கலாமின் சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன: சி.வி

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டாக்டர் அப்துல் கலாம் சிந்தனைகள் எப்போதும் மனிதவள மேம்பாடு, நாட்டின் வளர்ச்சி என்பவற்றையே குறியாகக் கொண்டிருந்தன. ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணப் பொது நூலக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'எம்மிடையே வாழ்ந்துவரும் பலர் இறந்து போகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களை அவர்களின் குடும்பத்தினரும், உற்றார் உறவினர்களும் நினைவு கூருகின்றனர். இன்னும் சிலர் அவர்களின் குடும்பத்தாரால் மட்டுமன்றி அவர்கள் பிறந்த ஊர், மற்றும் கிராமத்தில் உள்ள மக்களால் நினைவு கூரப்படுகின்றார்கள். அவர்கள் நினைவாக உள்ளுர் மண்டபங்களை, பஸ் தரிப்பிடங்களை அமைக்கின்றனர். மற்றும் இன்னோரன்ன நினைவுச் சின்னங்களை அமைத்து அவர்களை நினைவு கூருகின்றார்கள். ஆனால், மிகச்சிலரே உலகளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின்றார்கள்.

இப்புவியில் வாழ்ந்த காலப்பகுதியினுள் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறைமை, அவர்களால் சாதிக்கப்பட்ட சிறந்த சாதனைகள், விடாமுயற்சிகள், அவர்கள் நடத்தையின் முன் உதாரணங்கள் போன்றவை அவர்களை உதாரண புருசர்களாகக் கருத வைக்கின்றன. எனவேதான் அவர்களின் பின்னால் வருகின்றவர்கள் அவர்கள் காட்டிய பாதையை அடியொற்றி முன்னேறக்கூடிய வகையில் அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால், அவர்களையும் விஞ்சிய மிகச் சிலர் கற்பனையில் கூட நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவு அதீத திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்டவர்களாக விளங்கி, இவ் உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்து, உலகமே வியந்து அவர்களை உற்று நோக்குமாறு வாழ்ந்து மடிந்துள்ளார்கள்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் அவர்களில் ஒருவர். ஒப்புவமை இல்லாதவர். அவரின் திறமைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். என்றாலும் அவர் எளிமையின் பிறப்பிடமாக வாழ்ந்து மறைந்தார். மன்னர்களாலும் மாமேதைகளாலும் மதிக்கப்பட்டாலும் மக்களுடனேயே அவர் வாழ எத்தனித்தார். சாதாரண மக்கள் போலவே வாழ்ந்தார்.

டாக்டர் அப்துல் கலாம் சிந்தனைகள் எப்போதும் மனிதவள மேம்பாடு, நாட்டின் வளர்ச்சி என்பவற்றையே குறியாகக் கொண்டிருந்தன. ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் உறுதியாக இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் அறிவூட்டுவதிலும் அவர்களைச் சரியான பாதையில் வழிப்படுத்துவதிலும் தமது கூடிய நேரங்களைச் செலவழித்தார்.

டாக்டர் அப்துல் கலாம், தமிழ் நாட்டில் இராமேஸ்வரம் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியராக இருந்த போதும், அவர்  இந்திய மண்ணுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் தமிழை நன்கு பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பேசும் உலகத் தலைவராகத் திகழ்ந்தார். அந்த வகையில் அவர் எமது வடபகுதி மக்களுக்குஞ் சொந்தக்காரராக எமது தமிழ்ப் பேசும் மக்களின் தலைசிறந்த தலைவனாக, எம் மாணவர்களின் வழிகாட்டியாக எம்முள் இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார்.

இவர் மாணவர்களை விழிக்கும் போது 'அன்பான மாணவர்களே கனவு காணுங்கள்' என விழித்தே தமது உரையைத் தொடங்குவார். அவரின் உரையில் கனவு என்பதற்கு மிகச் சிறப்பானதொரு விளக்கத்தை அளித்திருந்தார். அதாவது 'உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு'. ஒவ்வொரு மாணவனும் மாணவியரும் தாம் என்னவாக வரவேண்டும் என்பதை முற்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நிலையை அடையும் வரை ஊன் உறக்கம் மறந்து தொடர்ந்து பாடுபட வேண்டும்; அப்போது அவர்களின் இலக்கைச் சுலபமாக அடைய முடியும் என்பதே அவரின் கருத்தாக இருந்தது.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 2012ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது யாழ் பல்கலைக்கழகத்தில் 'புயலைத் தாண்டிய தென்றல்' என்ற தலைப்பின் கீழ் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரியதொரு உரையை ஆற்றியிருந்தார். யாழ் இந்துக் கல்லூரியிலும் மாணவர்களிடையே உரையாற்றியது மட்டுமன்றி அம் மாணவர்களையும் எதிர்காலம் பற்றியதொரு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடிய சிறந்த உரையை வழங்கிச் சென்றிருந்தார்.

இத்துணை சிறப்புக்களும் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பெற்று இன்று திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதென்றால் அது எமது மக்களுக்கான ஒரு கௌரவம் என்றே நாம் கொள்ள வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X