2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கிந்ததொட்ட சம்பவத்துக்கு எதிராக கண்டனம் பிரேரணை

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டி.விஜித்தா

காலி, கிந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும் அதற்கு நீதியான விசாரணையைக் கோரியும், வடமாகாண சபையில் இன்று (23) விசேட கண்டனப் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்ட போதிலும்,  அப்பிரேரணைக்கு சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னர் அப்பிரேர​ணை, அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு, யாழ்ப்பாணம், கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில், நேற்று இடம்பெற்றது.

இதன்போது, கிந்தொட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற திட்டமிட்ட தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் விசேட பிரேரணை ஒன்றை, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் முன்மொழிந்தார்.

இவ்வேளையில், வவுனியாவில் இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் எனவே, அதைத் தவிர்த்துவிட்டு இப்பிரேரணையை நிறைவேற்றுமாறு, வவுனியா மாவட்ட உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இவ்விடயத்தில், பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பிரேரணைகளால் வன்முறைகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராச உள்ளிட்ட ஏனைய சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயத்தில் அவசர முடிவுகள் எடுக்காமல், அடுத்த அமர்வுக்கு இதை ஒத்திவைக்குமாறு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கிய ஆலோசனைக்கமைவாக, இவ்விடயம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .