2025 மே 23, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வரட்சி : மாணவர்கள் கடுமையாக பாதிப்பு

நடராசா கிருஸ்ணகுமார்   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, அங்குள்ள 35,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கும் அதேநேரத்தில், அங்குள்ள மாணவர்களும், பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி கல்வி வலயத்தில், 32,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றுவரும் நிலையில், ஏதோவொரு வகையில் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி கல்வி வலயத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் 2009ஆம் ஆண்டில் நிறைவடைந்த யுத்தத்துக்குப் பின்னர், மாவட்டத்தின் பல பாடசாலைகளில், தகரக் கொட்டகைகளிலேயே மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.

ஆண்டின் ஜூன், ஜூலை மாதங்களில், வரட்சியான சூழல் காணப்படுவது வழக்கமானது என்ற போதிலும், இம்முறை ஜூனுக்கு முன்பே, மழைவீழ்ச்சி குறைவடைந்து, குளங்களின் நீர் மட்டம் அடிநிலையைச் சென்றடைந்து, கடுமையான வரட்சியை மாவட்டம் எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து கல்வி கற்க முடியாத நெருக்கடி நிலைமையை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் வகுப்பறைகள், மர நிழல்களின் கீழ் நடாத்த வேண்டிய நிலைக்கு, ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வகுப்பறைகளுக்கும் கடுமையான வெப்பம் காணப்படுவதன் காரணமாகவே, மர நிழல்களின் கீழ் வகுப்புகள் நடைபெறுகின்றன.

மேலும், மாவட்டத்தின் 20க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

பாடசாலைகளுக்குச் செல்லும் சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களால், நீரையும் பழச்சாறுகளையும் கூடுதலாக அருந்தி, வெப்பத்தைத் தணித்துக்கொள்ளுமாறு, மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், நீண்ட தூரங்களில் இருந்து பாடசாலைகளுக்கு நாள்தோறும் நடந்து வரும் நிலையில், தற்போது நிலவும் வரட்சியும் அதிகரித்த வெப்பமும், மாணவர்களின் கற்றலைப் பாதித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X