2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இலைதழைகள் மட்டும் தான் சாப்பாடு: ஆனால் சிக்ஸ்பேக்

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய காலகட்டத்தில் நிறைய பேர் சாப்பிட, தூங்க நேரமில்லாமல் பிஸியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, ஐடி போன்ற துறைகளில் ஷிப்ட் வேலைக்கு செல்கிறவர்கள் இரவு நேரங்களில் ஜங்க் உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதால் உடற்பருமன், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் கூறும் ஒரே அறிவுரை சரிவிகித உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான்.

இப்படியான சூழ்நிலையில் மரங்களிலும், மலைகளிலும் ஏறி அங்குள்ள கீரை வகைகளை மட்டுமே சாப்பிட்டு, இயற்கையான நீரோடைகளில் இருக்கிற தண்ணீரை மட்டுமே குடித்து ஒருவர் பல ஆண்டுகளாக உயிர் வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இப்படிப்பட்ட ஒரு டயட்டை மட்டுமே பின் பற்றி சிக்ஸ் பேக், ஃபிட்னெஸ் என அசால்ட்டாக வலம் வந்து மருத்துவர்களையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்.

யார் இந்த இளைஞர்? அவருடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள ஈடிவி பாரத் குழு அவரை தேடிச் சென்றது.

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவில் உள்ள உகரகோலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புத்தன் மல்லிக் ஹோசமணி. 60 கிலோ எடை, 5.9 அடி உயரம் என கட்டுகோப்பாக காணப்படுகிறார். 34 வயதான இவர் ஒரு யோகா பயிற்சியாளர். இவர் தனது கிராமத்திலிருந்து சற்று தொலைவில் இருக்கிற சித்தன்கொல்லா என்று அழைக்கப்படுகிற ஹெக்கோலா என்ற மலையில் ஒரு குடிசையை அமைத்து வசித்து வருகிறார். தனது வாழ்க்கை முறை குறித்து ஹோசமணி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“தினமும் இரவு 11 மணிக்கு தூங்கச் செல்வேன். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி நேரம் யோகா செய்வேன். இப்படி ஒரு நாளைக்கு நான்கரை மணி நேரம் மட்டும் தான் தூங்குவேன். பிறகு தினமும் 2 தட்டு இலைகளை சாப்பிடுவேன். தாகத்திற்கு மலையிலிருந்து வருகிற ஓடைகளின் தெளிந்த நீரை குடிப்பேன். காலையில் குளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

மதிய உணவாக திரும்பவும் இலைகளைத் தான் சாப்பிடுவேன். இரவு 8 மணிக்கு ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வேன். இரவும் உணவும் அதே போல இலைதழைகள் தான். எப்போதும் கீரைகளை மட்டுமே சாப்பிட்டாலும், சில நாட்கள் தோணும் போது கொஞ்சம் அரிசி சாதம் சாப்பிடுவேன்” என்கிறார்.

கீரைகள் மற்றும் இலைதழைகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழலாம் என்ற எண்ணம் இவருக்கு குரங்குகளிடமிருந்து வந்ததாக கூறுகிறார். “முதன்முதலாக நான் கீரைகளை சாப்பிட்ட போது சில கீரைகள் கசப்பாக இருந்தன. இருந்தாலும் நான் அவற்றை திரும்ப திரும்ப சாப்பிட்டு பழக்கிக் கொண்டேன். 80க்கும் மேற்பட்ட வகையாக கீரைவகைகளை நான் சாப்பிட்டாலும், குறிப்பிட்ட 4 வகையான கீரைகள் மிகவும் கசப்பாக இருப்பதால் அவற்றை சாப்பிடுவதில்லை. அதேபோல், ஆரம்பத்தில் குரங்குகள் மற்றும் ஆடுகள் சாப்பிடாத தழைகளை நான் சாப்பிட்டு பார்த்தேன். அதனால் மிகவும் கடினமாக சூழலை சந்திக்க நேர்ந்தது. அதன்பிறகு அவற்றை தவிர்த்து விட்டேன்.

கீரை வகை உண்ணும் டயட் முறையை பின்பற்றுவதால் எனக்கு சளி, காய்ச்சல் போன்ற எந்தவித உடல்நல பிரச்சினைகளும் வருவதில்லை. இருந்தாலும் இந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்த பிறகு 3 முறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருமுறை இரும்பு கம்பி ஒன்று காலில் குத்தியதாலும், மற்றொரு முறை குளிரால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், கடைசியாக முட்செடியின்மீது விழுந்ததாலும் மருத்துவமனைக்கு சென்றேன்” என்று விளக்குகிறார்

ஹோசமணிக்கு மலையில் வாழ்வது ஒன்றும் புதிதல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது இளமை காலத்திலிருந்தே காலையில் மலைக்குச் சென்றால் இரவு வரை அங்கேயே தான் இருப்பாராம். தூங்குவதற்கு தான் வீட்டிற்கே செல்வாராம். அந்த அனுபவம் தான் இப்போது மலையிலேயே தைரியமாக வசிக்க உதவுவதாக கூறுகிறார். அப்போதே ஆரோக்கியமான உணவுகள், மலை, இயற்கை காற்று என தனது காதலை வளர்த்துக் கொண்ட ஹோசமணி இப்போது இன்னும் தனது வாழ்க்கைமுறையை எளிமையாக்கிக் கொண்டதாக கூறுகிறார்.

“10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பால் குடிப்பதோடு, வேர்க்கடலை, பேரீச்சை, திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள், உலர் திராட்சை ஆகியவற்றோடு, கொஞ்சம் சாதம், சப்பாத்தி, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு வந்தேன். ஆனால் இப்போது அந்த உணவுகளை என் கண் முன்னால் கொண்டு வந்து வைத்தாலும் அவற்றை சாப்பிட தோன்றுவதில்லை. ஏனென்றால் இலைதழைகளில் உள்ள மருத்துவம் மற்றும் தெய்வீக குணத்தை புரிந்து கொண்ட பிறகு மற்ற உணவுகளின்மீது நாட்டம் ஏற்படுவதில்லை. இந்த உணவுமுறையால் என் குடலில் எந்த பிரச்சினையும் இல்லை” என்கிறார்.

யோகா பயிற்சி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது!

யோகாசனம் செய்வதாலும், இயற்கை வாழ்வியலாலும் தனக்கு கிடைக்கிற நன்மைகளை விளக்குகிறார். “எனது ஆரோக்கியத்துக்கு முக்கியமான காரணமே நான் செய்கிற ஆசனங்கள் தான். நவாலியாசனம், சக்ராசனம், வஜ்ராசனம், பாதஹஸ்தாசனம், சூர்யநமஸ்காரம், அர்த்தகதி சக்ராசனம், குகுதாசனம், பகாசனம் போன்ற 50க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்கிறேன். இவை என் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

அதுபோக, நாள் முழுவதும் மலையை சுற்றி நடக்கிறேன். பெரிய பாறைகள் மற்றும் குன்றுகளில் ஏறி யோகாசனங்கள் செய்கிறேன். செல்போனில் கருட புராணம் மற்றும் சிவ புராணங்களை படிக்கிறேன். எனக்கு எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் கொத்தனார் வேலைக்கு செல்கிறேன். இந்த மலை, என் வீடு, அழகிய சூழல் இதுதான் எனக்கு சொர்க்கம். இதைத்தவிர எனக்கு எந்த ஆசையும் இல்லை. மன திருப்தியுடன் இருக்கிறேன்” என்கிறார்.

 

ஹோசமணியின் அப்பா பெயர் மாலிக். அவர் இப்போது உயிருடன் இல்லை. அம்மா மபூபி தனது மற்றொரு மகன் வீட்டில் வசித்து வருகிறார். ஹோசமணிக்கு 2 சகோதரர்கள், ஒரு சகோதரி. அனைவருமே திருமணமாகி தங்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். ஆனால் இவருக்கோ திருமணம் செய்து கொள்வதில் நாட்டம் இல்லையாம்.

“தனியாக இருக்கவே விரும்புகிறேன். சத்தம், சலசலப்பு மற்றும் அதிக மக்களை என்னால் கையாள முடியாது. நான் அதிகம் பேசுவதைக் கூட விரும்புவதில்லை” என்கிறார். ஹோசமணியின் யோகா திறமையால் ஈர்க்கப்பட்ட பலர் தங்களது மடங்களுக்கு அவரை அழைத்த போதும் போகவில்லையாம்.

ஹோசமணியின் கீரை டயட் மற்றும் வாழ்க்கைமுறையான மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கே.எல்.இ பி.எம்.கே ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறைத் தலைவர் மருத்துவர் மஹந்தேஷ் ராமண்ணவர் கூறுகையில், “கீரைகளை சாப்பிட்டு செரிக்கிற சக்தியை இறைவன் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கிறார். அப்படியிருக்கையில் ஹோசமணி எப்படி பல்வேறு வகையான கீரைகளை சாப்பிடுகிறார் என்பதை பார்க்கும் போது மருத்துவ உலகிற்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்கிறார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .