2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

குடியிருப்புகளுக்கு மத்தியிலுள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி தொடர் சத்தியாக்கிரக போராட்டம்

எம். றொசாந்த்   / 2017 ஜூலை 12 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றுமாறு கோரி, புத்தூர் கலைமதி மக்கள், மண்டப முன்றலில், தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம், இன்று (12) காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

“வடக்கு மாகாண சபையே, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்று, மக்களின் வாழ்விடச் சூழலை பாதுகாத்து கிராமிய கட்டமைப்பை வலுப்படுத்து, பழமைக்கும் வழமைக்கும் மக்களை பலியிடுவதா, மாகாண சபை ஆட்சியே, சமூக நீதியை மறுக்காதே,” போன்ற வாசகங்களை தாங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தூர் கலைமதி எனும் கிராமத்தில், மயானத்துக்கு அருகில் உள்ள மக்களின் நன்மை கருதி, அந்த மயானத்தில் சடலங்களை எரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டு, மாற்று மயானத்தை பயன்படுத்தினார்கள்.

எனினும், அண்மையில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு, குறித்த முதியவரின் சடலம் அம்மயானத்தில் எரிக்கப்பட்டது.

மேலும், குறித்த மயானத்துக்கு சுற்று மதில் அமைத்து, பாதுகாப்பான முறையில் சடலங்களை எரிக்கலாம் எனவும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் அனுமதி வழங்கியிருந்தார்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் அம்மயானத்தில் சடலங்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைக்கப்பட்ட மதிலையும் உடைத்துள்ளனர்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய அமைக்கப்பட்ட மதிலை உடைத்த அனைவருக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

பிடியாணையை இரத்து செய்யுமாறு கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் குறித்த வழக்கை இரத்துச் செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், உத்தரவுக்கமைய அனைவரையும் சரணடையுமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில், எட்டுப் பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். ஆறு பேர் மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்தனர். மேலும், 40 பேர், மல்லாகம் நீதிமன்றில் நேற்று  சரணடைந்தனர். இந்நிலையில், 40 பேரில், 12 பேரைப் பிணையில் விடுவித்த நீதவான், மீதி அனைவரையும், இம்மாதம்24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X