2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நிறைவேற்றப்பட வேண்டும்’

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

“தேர்தல் போட்டியில் நாங்களும் கலந்துகொண்டு பணியினை செய்துகொண்டிருக்கின்றோம் தமிழ் மக்கள் தங்கள் அவலங்களுக்கு விடைகொடுத்து மீள் எழுச்சிகொள்ளும் காலம் உருவாகி நிற்கின்றது” என, ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு – கைவேலிப் பகுதியில் உள்ள தலைமைச் செயலகத்தில், இன்று நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தமிழ்த் தேசிய அரசியல் இரண்டின் ஒருமைப்பாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் தங்கி இருந்தது. ஆயுதப்போராட்டத்தின் வெற்றியானது இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றியில் தங்கி நிக்கின்றது என்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.

“இந்த காலம் பொன்னான காலம் இந்தக் காலத்தில் எமது தேசிய ஒருமைப்பாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக தாயக பகுதியில் நிறுவிக்கொள்வதற்கான தீர்க்கமான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

“ஆயுதப்போராட்டம் ஊடாக அடைந்த அனைத்து வெற்றிகளும் இன்று அரசியல் ரீதியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றிமூலம் நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை உள்ளது.

“கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாக தமிழ் மக்களுக்கான நிதந்தர தீர்வு தொடர்பில் 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஒஸ்லோவில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி அலகின் அடிப்படையில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாங்கள் நினைத்தபடி தமிழ்த் தேசிய அரசியலை கொண்டு செல்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கான அரசயல் ரீதியான சுயாட்சி அலகு, உள்ளூர் சமஷ்டி முறை ஒஸ்லோவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதற்கு அமைவாக அந்த வழியில் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற வரைபு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது, நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமாக இருக்கின்றது.

“ஓர் இடைக்கால தன்னாட்சி வரைபு ஊடாக கூட்டுறவு உள்ளூராட்சி கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, கிராம உட்கட்டமைப்பு தொடர்பான முக்கிய விடயங்கள் முன்னால் போராளிகளின் துன்பகரமான நிலையில் இருந்து மீட்டு எடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

“இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் முழுமையாக எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்காக நாங்கள் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முழுமையாக எமது ஆணையை வழங்க வேண்டும். 

“பெரும்பான்மை சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் அதன் ஊடாகத்தான் முன்னேற்றகரமாக செல்லமுடியும். எதிர்காலத்தில் எமது மக்கள் தொடர்ந்தும் அவலநிலைக்குள் தள்ளப்படாமல் சுமூகமான, சமாதானமான நிதந்தரமான தீர்வுத் திட்டத்தைப் பெற்று, நிம்மதியாக தாயகப் பகுதியில் வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“வடக்கின் தற்போதைய தேர்தல் களம் தொடர்பில், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்தபோது, வடக்கில் ஒற்றுமையான நிலை காணப்படவில்லை. 5 கட்சிகளாக வெளியில் பிரிந்து நிக்கின்றன. இவர்கள் ஒவ்வொரு கோணங்களில் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் பின்னணி தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இலக்குவைத்தே இவர்களின் அரசியல் காணப்படுகின்றது.

“இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள், இவர்கள் யார் என்பதை இவர்கள் அடையாளப்படுத்தவில்லை. எதிர்காலத்தில் மக்களுக்கு என்ன செய்யப்போகின்றார்கள் என்று முன்வைக்கவில்லை. சரியான கொள்கைத் திட்டம் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் விமர்சிப்பதுதான் முக்கியமான நோக்கமாக இருக்கின்றது.

“தென்னிலங்கையின் தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது” என்றும், அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X