Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனாவைக் காரணம் காட்டி, அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்கால கொரோனா நிலைவரம் தொடர்பில், இன்று (15) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“தற்போது மிகவும் ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தினசரி 100 – 150 வரை உயிரிழப்புக்கள் இலங்கையில் ஏற்படுகின்றது. எனவே இலங்கையிலுள்ள சகல மொழிபேசும், சகல மதஞ் சார்ந்த எல்லோரும் கொரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“சுனாமியின் போது போரில் ஈடுபட்டிருந்த அரச படைகளும் விடுதலைப் புலிகளும் சில நாள்கள் தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து மக்களுக்கு உதவி புரிந்ததை இத்தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
“ஆகவே, அரசியல் வேறுபாடுகள் தாண்டி, கொரோனாவிலிருந்து நாட்டை எப்படி மீட்கலாமென நாமனைவரும் ஒன்றுபட்டுச் சிந்திக்க வேண்டும். சுகாதாரத் துறையினரின் அறிவுரைப்படி தனிநபர் சுகாதரம் பேணப்படல் அவசியம்.
“தொழிலுக்குச் செல்வோர் தவிர மற்றவர்கள் வீடுகளிலேயே தங்கியிருத்தல் நன்மைதரும்.
“ஏதேனும் தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது தவறாது முகக்கவசம் அணிதலும், தனிநபர் சமூக இடைவெளிகளைப் பேணலும் அவசியம். குறிப்பாக தற்போதைய இக்கட்டான காலத்தில் இரண்டு முகக்கவசங்களை அணிவது சிறப்பானது. காரணம் வீரியமிக்க டெல்ரா வகைக் கொரோனா வைரசின் பரவல் இலங்கையில் அதிகரித்துள்ளது.
“அனைவரும் தேவையற்ற வகையில் ஒன்று கூடும், ஒன்று திரளும் நிகழ்வுகளைத் தவிர்த்தல் வேண்டும். பெரிய நிகழ்வுகளெனின் ஒருசில மாதங்களுக்காகவாயினும் ஒத்தி வைத்து நடத்துதல் சிறப்பு.
“இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல், தொண்டை நோ போன்ற சந்தேகத்துக்கிடமான அறிகுறிகள் இருப்பின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்படி உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலை அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைத் தொடர்புகொள்ளல் வேண்டும்.
“மிக முக்கியமான விடயம் என்னவென்றால் அனைவரும் தவறாது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியின் பெயரென்ன? எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது? இந்தத் தடுப்பூசியைப் போட்டால் உயிரிழப்பு ஏற்படுமா? அமெரிக்காவின் 'பைசர்' தடுப்பூசி வரும்வரை காத்திருப்போம் என்றெல்லாம் பாராது அந்தந்தப் பகுதிகளில் எந்தத் தடுப்பூசி வழங்கப்படுகின்றதோ அதனை 30 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரு தடவைகள் தவறாது பெறுதல் வேண்டும்.
“இஸ்ரேல். பிரித்தானியா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்ற இறுக்கமான நடைமுறையைப் பேணி இன்று கொரோனாவின் மோசமான தாக்கத்திலிருந்து விடுபட்டுள்ளதால் நாமும் சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வோம்.
“அரசியல் காழ்புணர்வுகளைத் தாண்டி கொரோனா எனும் பேரிடரிலிருந்து நாட்டையும், உயிர்களையும் பாதுகாத்து, வீழ்ந்து போகும் பொருளாதார நிலையிலிருந்தும் மீண்டெழுவதற்கு ஒன்றுபட்டு நிற்போமாக!
“அதேவேளை, தமிழ் மக்களின் உரிமைகள் உடைமைகள் பறிபோகாமல், நிரந்தர அரசியற் தீர்வைப் பெறுதல் என்ற விடயங்களிலும் உறுதியுடன் செயற்படுவோமாக! ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago