2025 மே 14, புதன்கிழமை

‘கோட்டாவின் ஏவலாளிகளை தோற்கடியுங்கள்’

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

“கோட்டாபயவை நாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தடவை விரட்டி அடித்துவிட்டோம்” எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ​வேட்பாளர் ஈ.சரவணபவன், அதேபோல, அவரின் கைக்கூலிகளாக, ஏவலாளிகளாக இங்கு வலம் வருபவர்களை இந்தத் தேர்தலுடன் அடித்து விரட்ட வேண்டுமெனவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (27) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், தங்கள் சொந்தங்களை குருதி சிந்த வைத்த கோட்டாயவை மறுபடியும் தோற்கடிக்க ஒரு வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறதெனவும் கோட்டாவின் அடியாள்களான டக்ளஸ், அங்கஜனை தோற்கடிப்பதன் ஊடாக அதனை நீங்கள் செய்ய வேண்டுமெனவும் கூறினார்.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் ஓரணியாக, ஒரு நிலைப்பட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கை காட்டிய வழியில் வாக்களித்தார்கள்.

“தமிழினப் படுகொலையின் சூத்திரதாரி, இறுதிப் போரின் கொலையாளி யார் என்று தமிழ் மக்கள் கருதினார்களோ அவரை, தங்கள் வாக்கு என்ற ஆயுதத்தால் வெட்டி வீழ்த்தினார்கள். தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்தமையால்தான் அது சாத்தியமாயிற்று” எனவும், சரவணபவன் தெரிவித்தார்.

கோட்டாவுக்கு கொடுத்த அடி

“கோட்டாபயவுக்கு தமிழ் மக்கள் கொடுத்த அடி பலமானது. அந்த அடியை தொடர்ந்தும் தக்க வேண்டும். ஆனால் இப்போது அதை தக்க வைக்கும் வகையில் தமிழ் மக்களின் செயற்பாடுகள் இல்லை என்பதுதான் வேதனைக்குரியது” என்றார்.

“இன்று போட்டியிடும் அங்கஜன், டக்ளஸ் போன்றவர்கள் யார்? அவர்கள் எந்தக் கட்சியில் இங்கு போட்டியிடுகின்றனர்? அவர்கள் வெற்றி பெற்றால் யாருடன் இணைந்து கொள்வார்கள்? இந்தக் கேள்விகளுக்கு விடை தேடியிருக்கின்றீர்களா?

“ராஜபக்‌ஷர்களின் குடும்பக் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இரண்டறக் கலந்துதான் அவர்கள் போட்டியிடுகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயருடன் ஏன் போட்டியிடுகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?” எனவும் அவர் வினவினார்.

டக்ளஸ் செய்தவற்றை மறந்துவிட்டீர்களா?

“அமைச்சராக வலம் வரும் டக்ளஸ் கடந்த காலங்களில் என்ன செய்தார் என்பதை மறந்து விட்டீர்களா? 2006ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபயவுடன் இணைந்து அவர் இங்கு என்ன செய்தார் என்பதை மறந்து விட்டீர்களா?

“வீதிக்கு வீதி சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் உங்களது பிள்ளைகள் இல்லையா? ஊரடங்கு நேரத்தில் இரவில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டவர்கள் உங்கள் இரத்தமில்லையா? இராணுவத் துணைக்குழுவாக இயங்கி காட்டிக் கொடுத்தவர்களை மறந்து விட்டீர்களா?

“டக்ளஸ் தேவானந்தா யாருடைய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கின்றார்? அவரின் எஜமானார் யார்? கோட்டாபய. கோட்டாபயவின் ஒருமுகம் அங்கஜன் என்றால் மறுமுகம் டக்ளஸ். டக்ளஸ் வெற்றி பெற்றால் யாருடன் கூட்டுச் சேருவார்? நீங்கள் இரண்டரை இலட்சம் வாக்குகளால் தோற்கடித்த கோட்டாவுடன்தான் அவர் கூட்டுச் சேர்வார்” எனவும், சரவணபவன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X