2025 மே 07, புதன்கிழமை

கோண்டாவில் வாள்வெட்டு: மூவர் கைது

Niroshini   / 2021 ஜூலை 04 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த் 

கோப்பாய் - கோண்டாவில் , செல்வபுரம் பகுதியில், ஜூன் 30ஆம் திகதியன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், யாழ். மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால், இன்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - பொம்மைவெளியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும், கோண்டாவிலைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும், கொக்குவில் - வராகி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவருமே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 3 கஜேந்திரா வாள்களும்,  குறித்த சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும்,  ஓட்டோ ஒன்றும், சாதாரண வாள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், 16 பேர் கொண்ட அணியினர் 5 மோட்டார் சைக்கிளில் சென்று, குறித்த சம்பவத்தை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.  

 சம்பவத்துடன் தொடர்புடையோர் நால்வர் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் பொம்மைவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் 9 பேர் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர்களெனவும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 அத்துடன், ஆவா குழுவிலிருந்து பிரிந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜி குழு என்று ஆரம்பித்தனர். அவர்கள் ஜி குழுவுக்கு பாடல் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டனர். அதனாலேயே அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்த ஸ்டியோவுக்கு தீ வைத்ததுடன், ஜி குழுவைச் சேர்ந்தோருக்கு வாளால் வெட்டியதாகவும்,  சந்தேக நபர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

 குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 13 சந்தேக நபர்களும் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்த மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ், குறித்த சந்தேக நபர்களை மறைத்து வைத்திருந்து உதவி புரிவோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.

பிரதான சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X