2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கிணறுகளை தோண்ட வேண்டும்

Niroshini   / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்
 
மண்டைதீவில் மூடப்பட்டுள்ள மூன்று கிணறுகளையும் தேண்ட வேண்டும். அது தொடர்பில் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வேலுப்பிள்ளை பேரின்பநாயகம் என்பவர் கோரிக்கை விடுத்தார்.

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு, ஞாயிற்றுக்கிழமை (28) வேலணை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.  அங்கு சாட்சியமளிக்கும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அல்லைப்பிட்டியிலிருந்த போது, யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி இடம்பெயர்ந்து மண்கும்பான் பள்ளிவாசலில் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கு எனது தங்கையின் மகனான தேவராசா சந்திரலிங்கம் (காணாமற்போகும் போது வயது 24) என்பவரை கடற்படையினர் பிடித்தனர்.
அதன்பின்னர் அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை. என்றார்.

'2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் மண்டைதீவு 1ஆம் வட்டாரத்தில் கடற்படையினரால் மூடப்பட்ட 2 தோட்டக்கிணறுகளில் ஒரு கிணறு தோண்டப்பட்டது.

இக்கிணற்றிலிருந்து 85 மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. அவை தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்றன. எனினும் எப்பலனும் இல்லை. அருகில் மூடப்பட்டிருந்த மற்றைய கிணறு தோண்டப்படவில்லை. இதேவேளை மண்டைதீவு தேவாலயப்பகுதியில் கடற்படை முகாம் ஒன்று அமைந்திருந்தது. அந்த முகாமுக்குள் இருந்த கிணறும் மூடப்பட்டுள்ளது.

தீவகப்பகுதிகளில் காணாமற்போன அனைவரும் கொல்லப்பட்டு அக்கிணறுகளுக்குள் போடப்பட்டு மூடப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம்.

எனவே, இக்கிணறுகளை தோண்டி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X