2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத நடவடிக்கையால் அருகி வரும் கால்நடைகள்

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ். தீவகப் பகுதிகளில், குறிப்பாக, புங்குடுதீவு, மண்டைதீவு பகுதிகளில், கால்நடைகள், சட்டவிரோதமாக, இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக புங்குடுதீவு மக்களை சந்தித்து கலந்துரையாடியபோது, மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

மண்டைதீவு, புங்குடுதீவு, வேலணைப் பகுதிகளை பொறுத்தளவில், வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களே, கால்நடைகளை அதிகம் வளர்த்து வருகின்றனர். மேலும், பெருமளவில் கட்டாக்காலி கால்நடைகளும் இப்பகுதிகளில் உள்ளன.

இவற்றை விஷமிகள் சிலர் பிடித்துச் சென்று, பற்றைகளுக்குள் வைத்து, இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக பசு மாடுகள் கூட வெட்டப்பட்டு, இறைச்சி, தீவகத்துக்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றது.

இது தொடர்பாக பிரதேச செயலகம், பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட போதும் போதுமான அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேவேளை, புங்குடுதீவில் சமூக அமைப்பொன்றைச் சேர்ந்த இளைஞர்கள், கட்டாக்காலி கால்நடைகளை பிடித்து, இடமொன்றில் பட்டி அமைத்து, பராமரிப்பதற்கும், அவற்றிலிருந்து பயனைப் பெற்று, தீவக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போது, அது மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு குழப்பங்கள் உருவாகியிருக்கின்றது.

இவ்வாறு கேட்பாரற்ற நிலையில் பெருமளவு கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கான போதிய நடவடிக்கைகள் இல்லை. இளைஞர்களும் சமூக அமைப்புக்களும் தடுக்க நினைக்கும்போது, அதற்கு எதிராகப் பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கால்நடைகள், குறிப்பாக மாடுகள் வேட்டையாடப்படுகின்றது.

எனவே, இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குரிய உடனடி நடவடிக்கைகள் தேவை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவ்வாறு தொகையின்றி அதிகளவில் கால்நடைகள் வெட்டப்படுவதால் அவை அருகி வருகின்றன. இதனால் சிறிது காலத்தில் வாழ்வாதாரத் தேவைகளுக்காக கூட கால்நடைகளைக் காணமுடியாத நிலை கூட ஏற்படலாம் என அச்சம் தெரிவித்தனர்.

மேலும், புங்குடுதீவில் மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு பகுதியைக்காண்பித்த மக்கள், அந்த பகுதியே மாடுகள் திருட்டுத்தனமாக வெட்டப்படும் பகுதி என கூறினர்.

அந்த பகுதியில் கால்நடைகளின் எலும்புகள், மண்டை ஓட்டு எலும்புகள் என எச்சங்கள் அதிகளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X