2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஷ்ணகுமார் 

“சட்டத்துக்கு முற்றிலும் முரணாக, பெரும் தொகை நிதியை அனுமதியின்றி அன்பளிப்புச் செய்த, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்துக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை (24), கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம், பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு, ஐந்து இலட்சத்து 20 ஆயிரத்து 650 ரூபாயை, அன்னதான மண்டபம் அமைக்க, அன்பளிப்பாக வழங்கியது. இது, சங்கத்தின் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. 

இது தொடர்பாக வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரனை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், 

“குறித்த விடயம் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. சங்கத்தின் சட்டத்துக்கு அமைவாக, 5,000 ரூபாய் வரை மாத்திரமே அன்பளிப்புச் செய்ய முடியும். அதுவும் உரிய முறைப்படி அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், குறித்த சங்கத்தினர், சட்டத்துக்கு முரணாக எவ்வித அனுமதிகளும் இன்றி, தங்களின் விருப்படி, சட்டத்துக்கு விரோதமாக நடந்துகொள்கின்றனர். 

“எனவே, இவர்களின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, சங்கத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்” என்றார். 

இது தொடர்பில், கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி நல்லதம்பி கருத்துத் தெரிவிக்கையில், 

குறித்த சங்கத்தினர் தங்களிடம் எவ்வித அனுமதிகளும் பெறுவதில்லை என்றும் அவர்கள் தொடர்ச்சியாக கூட்டுறவுச் சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக இயங்கி வருகின்றனர் எனவும், இந்த விடயம் தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .