2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’சிவசக்தி ஆனந்தன் ஒத்துப்போக மறுத்தமையால் சபை​​களை இழந்தோம்’

க. அகரன்   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில், தேசிய கட்சிகளுக்கு எதிராக, தமிழ்க் கட்சிகள் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவைகள் உரையாடியதாகக் குறிப்பிட்ட வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், எனினும், ஒத்துப் போவதற்கு அவர் மறுத்து விட்டாரெனவும், அதனாலேயே, சில சபைகளைக் கூட்டமைப்பு இழந்ததெனவும் குற்றஞ்சாட்டினார்.

வன்னியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை பெற்ற சில சபைகளில், தமிழ்த் தேசியக் கட்சிகள் தவிர்ந்த வேறு கட்சிகள் ஆட்சியமைத்தமை குறித்து, ஊடகங்களுக்கு இன்று (30) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"எமக்குள்ளே என்னதான் பிரிவு இருந்தாலும், தமிழ் பேசுகின்றவர்கள் என்ற வகையிலும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் என்ற வகையிலும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்ற வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம் எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவை காணப்பட்டதெனக் குறிப்பிட்ட அவர், இது தெடர்பில், சிவசக்தி ஆனந்தனுடன் பல தடவைகள் பேசியிருந்ததாகவும், ஆனால், கடைசி வரை அதற்கு அவர் ஒத்துப்போக முடியாதென்று கூறிவிட்டார் எனவும் குறிப்பிட்டார்.

"அவர் ‘ஆம்’ என்றிருந்தால், 4 சபைகளும் எம்மிடம் இருந்திருக்கும். இதற்கு ஒத்துழைப்பு வழங்காததன் விளைவே, தேசியக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்கும், அவர்களது ஆதரவுடன் ஆட்சி போனமைக்கும் காரணமாகும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான குற்றச்சாட்டு, சிவசக்தி ஆனந்தன் மீது ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருந்தாலும், தன்னிடம் உரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம், கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு தான் கூறியதாகவும், அதன் பின்னர் அவர்கள் தன்னைத் தொடர்புகொண்டிருக்கவில்லை எனவும், சிவசக்தி ஆனந்தன் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X