2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘சுற்றுளாத் தளம் சிறுவர் விளையாட்டு திடலாக மாற்றப்படும்’

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்,  எஸ்.நிதர்ஷன்  

“மக்களுக்கு எதிராக செயற்படுபவர்களை மக்கள் தான் எதிர்க்கவேண்டும். மாறாக அவர்களைக் கண்டு பயந்து ஒதுங்கக் கூடாது” என, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.  

மேலும், அக்கரையில் அமைக்கப்பட்ட சுற்றுலாத் தளத்தை அகற்றி, சிறுவர் விளையாட்டுத் திடலாக மாற்றுவதாகவும் உறுதியளித்தார்.  

தொண்டமானாறு - அக்கரையில் அமைக்கப்பட்ட சுற்றுலாத் தளத்தை அகற்றி, சிறுவர் விளையாட்டுத் திடலாக மாற்றக்கோரி, அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்தளத்துக்கு வடமாகாண ஆளுநர் விஜயம் ஒன்றை நேற்று (01)  மாலை மேற்கொண்டார். இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இதன்போது, வலி. கிழக்கு பிரதேச சபையால் அமைக்கப்பட்ட சுற்றுலாத் தளத்தால் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாவும், இது தொடர்பில் முதலமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியும் எந்தவிதப் பயனும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.  

மேலும், தாம் 44ஆவது நாளாகவும் கொட்டும் மழையிலும் இரவு, பகல் பாராது தமது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  

இவற்றைக் கவனத்தில் கொண்ட ஆளுநர், உல்லாசக் கடற்கரையில் இடம்பெறும் சீர்கேடுகளை நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார். பின்னர் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களை மக்கள் தான் எதிர்க்கவேண்டும் என்றும் பயந்து ஒதுங்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.  

மேலும், இவ்விடயம் தொடர்பில் பிரதேச சபையுடன் கலந்துரையாடுவதாகவும், பிரதேசத்தைத் துப்புரவு செய்து இங்கு போடப்பட்ட வெற்று மதுபானப் போத்தல்களை அகற்றி, உடைக்கப்பட்ட மலசலகூடங்களை மீளவும் திருத்துவதற்கு சிபாரிசு செய்வதாகவும் உல்லாசக் கடற்கரை என்ற பெயரை மாற்றி, சிறுவர் பூங்கா அல்லது சிறுவர் விளையாட்டுத் திடலாக மாற்றுவதற்கும் பிரதேசத்தில் பொலிஸ் காவலரண் ஒன்றை  ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதியளித்தார்.  

மேலும், இதற்கான பணிப்புரையை அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு ஆளுநர் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  

ஆளுநரின் உறுதிமொழியையடுத்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .