2025 மே 19, திங்கட்கிழமை

‘ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர்’

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 10 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளை அடக்கி ஆளுகின்றனர”; என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் இன்று (10) அனுஸ்டிக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“அரசின் அடாவடித்தனத்தினால், அதன் ஏவலில் நடைபெற்ற படுகொலையே இப்படுகொலையாகும். ஆயுத போராட்டத்தின் வரலாறு எழுச்சி கொண்ட சந்தர்ப்பங்களில் ஒன்றாக இந்த படுகொலை அமைந்திருந்தது.

உரும்பிராய் பொன்.சிவகுமாரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வு ஒழுங்கமைப்பில் தொண்டர்களாக செயற்பட்டவர்கள். இந்த படுகொலையை நேரில் கண்டு பொறுக்கமுடியாது, இதற்கு காரணமான அதிகாரிகளை பழிவாங்குவேன் என இந்த இடத்தில் சபதம் எடுத்தார்கள். பழிவாங்கும் நடவடிக்கையால் தான் அவரும் மரணத்தை பின்னாளில் தழுவிக்கொண்டார்.

இவ்வாறாக ஆயுத போராட்டம் எழுச்சி பெற உந்து காரணியாக இருந்தது இந்த படுகொலை. இன்று ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையிலும் எங்களை அரசாங்கம் அடக்கி ஆளுகின்றது.

ஒரு காலத்தில் பிரித்தானியர்கள் ஆயுதங்களால் இந்த உலகத்தை அடக்கி ஆண்டார்கள் என கூறினார்கள். ஆனால் இன்று ஆயுதம் இல்லாமல் வேறு விதமாக அடக்கி ஆளுகின்றார்கள்.

அதேபோல இன்று எமது ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அரசு ஜனநாயக விழுமியம் எனும் போர்வையில் தொடர்ந்து எங்கள் உரிமைகளை அடக்குகின்றன.

இந்த நிலையில் இருந்து மீட்சி பெற வேண்டுமாயின் இன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி எம்மை மாற்றி எமது உரிமைகளை பெற முயற்சிக்க வேண்டும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X