2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ள சி.வி.கே

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காஞ்சுரமோட்டை கிராம மக்களின் மீள்குடியேற்றத்துக்கு, வனவள திணைக்களமும் அரசாங்கமும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குக்கும் கடிதம் எழுதவுள்ளதாக, வடக்க மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன், காஞ்சுரமோட்டை கிராமத்தில், 1990க்கு முன்னர் அமைந்திருந்த பாடசாலையை மீள இயக்க உடன் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், அவர் உறுதியளித்தார்.

வவுனியா வடக்கு பிரதேசச் செயலாளர் பிாிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை கிராமத்தில், மக்களின் மீள்குடியேற்றத்துக்கு வனவள திணைக்களம் பெரும் சவாலாக இருப்பது குறித்து ஆராய்வதற்காக, அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையிலான வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 12 பேர், காஞ்சுரமோட்டை கிராமத்துக்கு, நேற்று  (17) நேரடியாக சென்று பாா்வையிட்டனர்.

இதன்பின்னர், உடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துத் தெரிவித்த அவர், காஞ்சுரமோட்டை கிராமத்தில் உள்ள மக்கள் ஒழுங்கான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதாகத் தெரிவித்தார்.

இதனடிப்படையில், மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் துரிதமாக மீள்குடியேறுவதற்கு அரசாங்கம் ஆவண செய்வதுடன், வனவள திணைக்களம் மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருக்காமல் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டுமெனக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல் காஞ்சுரமோட்டை கிராமத்தில் மீள்குடியேறும் மக்கள் பெரும்பாலானவர்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இந்தியா- தமிழகத்தில் முகாம்களில் வாழ்ந்துள்ளார்களெனவும் தற்போது அவர்கள் நாடு திரும்பியிருக்கும் நிலையில், அவர்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பான இழுபறிகள் குறித்து, இந்தியத் துணை தூதரகத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, காஞ்சுரமோட்டை கிராமத்திலிருந்து மக்கள் இடம்பெயர்வதற்கு முன்னர் அங்கு பாடசாலை இருந்ததாகத் தெரிவித்த அவர், அந்தப் பாடசாலை இருந்தமைக்கான கட்டட எச்சங்கள் தற்போது காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஆகவே, அந்தப் பாடசாலையை உடனடியாக ஆரம்பிப்பதற்கும் ஆவண செய்யப்படுமென, அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .