2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி உறுதியளித்த காலஅவகாசம் நிறைவு: இனி என்ன?

Menaka Mookandi   / 2016 ஜூன் 17 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நலன்புரி முகாம் மக்களைச் சந்தித்து, 'உங்களை இன்னும் 6 மாத காலத்துக்குள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்வேன்' என உறுதியளித்த நிலையில், அந்த கால அவகாசம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது.

இருப்பினும், வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம், இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், 38 நலன்புரி நிலையங்களில் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான காணிகளை, உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், முப்படையினர் தம்வசப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த டிசெம்பர் 20ஆம் திகதி நத்தார் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, நலன்புரி முகாம்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, 'முகாம் வாழ்க்கையை இன்னும் 6 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து, உங்கள் அனைவரையும் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற நடவடிக்கை எடுப்பேன்' என்று உறுதியளித்தார்.

அவர் கூறிச் சென்ற பின்னர் 701.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் அவை, முகாம் மக்களின் காணிகள் இல்லையென்பதால் முகாம் மக்களின் வாழ்க்கை தொடர்ந்தும் நலன்புரி முகாம்களிலேயே தொடர்கின்றது.

இந்நிலையில், வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள 38 நலன்புரி முகாம்களில் வசித்து வருகின்ற மக்கள், தங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் ஒவ்வொரு கிழமைக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், முகாம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என மீண்டும் மார்ச் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி அறிவித்தார். இதனையடுத்து, தங்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை ஜனாதிபதி உறுதியளித்த 6 மாதங்கள் வரையிலும் ஏற்பாட்டாளர்கள் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தங்கள் சொந்த நிலங்களுக்கு போக முடியாமல் போனால், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, வெள்ளைக் கொடிகளுடன் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் தங்கள் காணிகளுக்குச் செல்வோம் என முகாம் மக்கள் இதன்போது கூறினர்.

ஜனாதிபதி உறுதியளித்த 6 மாத காலம் முடிவடைகின்ற போதும், முகாம் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் இன்னமும் மீளக்குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக நாளை 18ஆம் திகதி சனிக்கிழமையன்று ஜனாதிபதி, யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

இதன்போது, தனது 6 மாதகால அவகாசம் குறித்து கவனமெடுத்து, முகாம் மக்களுக்கு நியாயம் வழங்குவரா? என்பது தொடர்பில் முகாம் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். நல்லாட்சி அரசாங்கம் என்னும் இந்த அரசாங்கத்தின் காலத்தில், வலிகாமம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதுவரையில் 1739 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X