2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘தன்னிச்சையான செயற்பாடுகள் மோசடியாகும்’

Editorial   / 2018 மே 01 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் மாநகரசபை சட்டதிட்டங்களை மீறி சபையின் அங்கிகாரங்கள் இல்லாமல் தன்னிச்சையாக மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளுமே மோசடியான செயற்பாடுகளாகவே பார்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணண் “இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக மாநகர முதல்வர், சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்.மாநகரசபையில் மாநகர மேயர் ஆர்னோல்டால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் மோசடிகள் தொடர்பாக நாம் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சரும் மாகாண முதலமைச்சருமான முதலமைச்சரிடம் முறைப்பாடு செய்திருந்தோம். இந்நிலையில், இதனை தன்னுடனேயே பேசியிருக்க முடியும் எனவும், நாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியில் இதனை மேற்கொண்டுள்ளதாகவும் மாநகர மேயர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாநகர முதல்வரது செயற்பாடுகளை குழப்புவதற்கு முயற்சிக்கவில்லை. நாம் தேர்தலில் போட்டியிடும் போதே தூய கரங்கள் தூய நகரங்கள் என்ற தொனிப்பொருளில் போட்டியிட்டோம். அதன் பின்னர் தேர்தலின் பின்னரும் யாழ்.மாநகர சபையில் இடம்பெறும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்போம் எனவும், ஊழல் மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக கண்காணிப்போம் எனவும் கூறியிருந்தோம்.

இதன்படி மாநகரசபை சட்டத்தின் 26ஆம் பிரிவு உப பிரிவு 01 இன்படி மாநகரசபையின் முதலாவது கூட்டத்திலேயே நிதி மற்றும் மேலும் இரு உப குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாமும் முதலமைச்சரிடம் இது தொடர்பாக முறையிடுவதற்கு முன்பே மாநகர சபையில் உப குழுக்கள் எவையும் நியமிக்கப்படாத நிலையில் அவற்றை நியமிக்குமாறும், அதற்காக விஷேட கூட்டமொன்றை கூட்டுமாறும் கடிதம் மூலம் மேயரிடம் கோரியிருந்தோம்.  ஆனால் அக் கூட்டத்தை கூட்டுவதற்கு பணம் விரயமாகும் என்ற வேடிக்கையான காரணத்தை கூறினார். உண்மையில் அக் கூட்டத்தை கூட்டுவதற்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கூட செலவாகாது.

இரண்டு மாநகரசபை கூட்டங்கள் முடிந்து விட்ட போதிலும் இன்னமும் உப குழுக்களை அமைக்காது மாநகரசபை சாதாரண ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளும், சபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளும் சபையின் அங்கிகாரம் இன்றியே வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று சபையின் அங்கிகாரம் இன்றி முதல்வரின் பெயரால் கேள்வி கோரல் விளம்பரங்கள் பத்திரிகையில் செய்யப்பட்டுள்ளதுடன் அதில் எந்தவிதமான குழுக்களும் நியமிக்கப்படாத நிலையில் பொய்யாக பெறுகைகள் குழு என பிரசுரிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது மாநகரசபை ஆரம்பிக்க முன்னர் ஆணையாளரால் தயாரிக்கப்பட்ட நிலையில் அதில் புனரமைப்புக்காக பெயர் குறிக்கப்பட பல வீதிகளில் தற்போது சபையின் எந்தவிதமான அங்கிகாரமும் இன்றி பதினெட்டு வீதிகளை புனரமைப்பதற்கான கேள்வி கோரல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவ்வாறு வீதிகளை தேர்வு செய்தது யார்? அதற்கு அங்கிகாரம் அளித்தது என்பது அனைத்துமே முதல்வருக்கு மாத்திரமே வெளிச்சமாகும்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகள் யாழ்.மாநகரத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறப் போவதையே எடுத்துக்காட்டுகின்றது. அத்துடன் முதல்வர் மாநகரசபையின் தேர்தலிலே போட்டியிட்டு தேர்வு செய்யப்படாத ஒருவரை மாநகரசபையின் இலட்சனை பொறிக்கப்பட்ட கடிதத்தின் ஊடாக தனது இணைப்பாளராக நியமித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுக்கான அனுமதி எந்த சட்டத்தில் உள்ளது என்பதனை முதல்வர் தெரிவிக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சுமந்திரன் உள்ள நிலையில் சட்ட ரீதியான ஆலோசனைகளை பெற்றிருந்தாலும் அவற்றை புறம்தள்ளி இச் செயற்பாடுகள் மாநகர முதல்வரால் தன்னிச்சையாக எதேச்சையதிகாரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன் இவ் மோசடி நடவடிக்கை தொடர்பாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X