2025 மே 17, சனிக்கிழமை

’தமிழ் முஸ்லிம் மக்களிடையே புரிந்துணர்வு வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 26 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்சன்

கல்முனையில் தனியாக தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாகுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவர்கள் அதற்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களது செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம்; மக்களுக்கோ நல்லதல்ல. உண்மையில் தமிழ் முஸ்லிம்; மக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்

அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை நாங்கள் மாத்திரம் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

யாழ். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது.

கல்முனைப் பிரச்சனைப் பொறுத்தவரையில் இந்த அரசின் காலத்தில் அதாவது தற்போது வந்த பிரச்சனை அல்ல. இது மிக நிண்டகாலமாக குறிப்பாக பிரேமதாசா காலம் தொட்டு இருந்த வருகின்ற பிரச்சனை தான். ஆயினும் இதை எதிர்த்து நிற்கக்கூடிய முஸ்லிம்; சமூகத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் நேரடியாக வரப்போவதில்லை. அவ்வாறானன பாதிப்புக்கள் அவர்களுக்கு எதுவுமே கிடையாது.

இருந்தாலும் அந்தப் பகுதிகளிலே ஒரு தமிழ்ப் பிரதேச செயலகமொன்று உருவாக்கப்பட்டு செயல்ப்படுவதன் மூலம் அங்கு தங்களுடைய இருப்பை பரவலாக்கி கொள்வதற்கு அல்லது ஆக்கிரமித்துக் கொள்வதற்கு தடைகள் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் அவர்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தான் நான் கருதுகின்றேன்.

உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லிம்; மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே நாங்கள் மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது.

உதாரணத்திற்கு பார்த்தீர்களானால் கிழக்கில் முதலமைச்சராக ஒரு முஸ்லிம்; காங்கிரஸ் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம். கிழக்கு மாகாண சபையில் எங்களிடம் 11 அங்கத்தவர்கள் இருந்த நிலையில் அவர்களிடம் 7 அங்கத்தவர்கள் இருந்த போதிலும் கூட நாங்கள் அந்த நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக கிழக்கு மாகாணத்தையே விட்டுக் கொடுத்தோம்.

ஆனால் இந்த ஒரு சிறிய பிரதேச செயலகப் பகுதியை அதாவது கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகப் பகுதியை விடுவிதற்கு அல்லது உருவாக்குவதற்கு அவர்கள் எவ்வளவோ தடைகளை ஏற்படுத்துகின்றார்கள்.

இதுவொரு நல்ல விசயம் அல்ல. அவர்கள் தரக் கூடிய தடைகள் என்பது இன்றைக்கு பாரதூரமான நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. இன்று பௌத்த துறவிகள் ஞானசார தேரர் போன்றவர்கள் (அதிலும் ஞானசார தேரர் அவர் பௌத்த துறவியோ தெரியவில்லை) இன்று அதிலே தலை வைத்து இதை ஒரு பூதாகாரமான பிரச்சனையாக ஆக்குவதற்கான அடித்தளங்கள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இது உண்மையில் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்; மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் நல்லதல்ல. ஆகவே இதைத் தீர்ப்பதற்கு அனைவரும்

ஒத்துழைத்து எவ்வளவு விரைவாக இதனைத் தீர்க்க முடியுமோ அந்தளவிற்கு விரைவாகத் தீர்க்க வேண்டுமென்பது தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது. இதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

ஆகவே கல்முனை விவகாரம் மட்டுமல்லாது பல விடயங்கள் தொடர்பிலும் இந்த அரசினாலும் கடந்த அரசாங்கங்களினாலும்

பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் என்னுடைய அறிவிற்கு அந்த வாக்குறுதிகளை முழுமையாக இவர்கள் நிறைவேற்றியதாக காணவில்லை. ஆனாலும் கல்முனை விடயத்தில் தற்போது வாக்குறுதி வழங்கப்பட்டள்ளது. அதே நேரம் இதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் எவ்வளவுதூரம் இதனை இழுத்தடிக்க முடியோ அவ்வளவு தூரம் அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. ஆகவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் இது நடைபெறுமா இல்லையா என்பதை இருந்து தான் பார்க்க வேண்டும். அவ்வாறு

நடைபெறாது விட்டால் ஒரு மிகப் பெரிய தேவையற்ற பிரச்சனை உருவாகுவதற்கு துணையாக நிற்கப்போகின்றார்கள் என்று தான் நினைக்கின்றேன் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .