2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘திங்கள் திறக்கப்பட்டாலும் பாதிப்பின்றி போராடுவோம்’

Editorial   / 2017 நவம்பர் 09 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

“தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழகம், கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படுமென பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பில்லாதவாறு, அரசியல் கைதிகளுக்காகப் போராடுவோம்” என, யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே. கிருஷ்ண மேனன் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் திங்கட்கிழமை கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில், கல்வி நடவடிக்கைக்குப் பாதிப்பில்லாது, அரசியல் கைதிகளுக்காகப் போராடுவோம்.

“அரசியல் கைதிகள் போராட்டத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். இந்நிலையில், தற்போது மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக மக்கள் மத்தியில் போராட்டத்தைக் கொண்டு செல்கின்றனர். இந்தப் போராட்டம், மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாற வேண்டும். அரசியல் கைதிகளுக்காக மக்கள் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். அரசியல்வாதிகளும் உங்கள் வேற்றுமையைக் களைந்து ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும்.

“யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவர்களை நல்ல எண்ண அடிப்படையில் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.

“மேலும், திங்கட்கிழமை மீள பீடங்கள் திறக்கப்பட்ட பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடி, போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னெடுக்க உள்ளோம்” என்றார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான பல்வேறான கோரிக்கைகளை முன்வைத்து,  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணத்தால், அப்பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைக்கழகம் மூடப்பட்டமையால், தங்களுடைய வீடுகளுக்குச் சென்றுள்ள மாணவர்கள், எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னதாக, தங்களுடைய விடுதிகளுக்குத் திரும்புமாறும் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்கெனவே, அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .