Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்ற நிலையில் மேற்கொள்ளப்படுகின்ற கல்வி முறைமை, மாணவ - மாணவியரை நடுத்தெருவுக்குக் கொண்டு செல்வதுடன், அரசாங்கத்தின் பொருளாதார மேம்படுத்தல் கொள்கைகளும் வெற்றி பெறாமல் போகின்றன என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஜெற்விங் ஹொட்டலில், இன்று (27) காலை நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கல்விக் கொள்கை மாற்றங்கள், எத்தனையோ திறமை மிக்க மாணவர்கள் சர்வதேச தரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தடையாக அமைந்தன எனலாம். தாய் மொழிக் கல்வி, மிகவும் சிறப்பானது. ஆனால், உயர் கல்வி அல்லது சர்வதேச தரத்திலான சட்டம் உள்ளடங்கலான கல்வியறிவைப் பெற்றுக் கொள்வதற்கு, ஆங்கில மொழி அத்தியாவசியமாகிற்று. அப்பொழுது புறக்கணிக்கப்பட்ட ஆங்கிலக் கல்வி, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரப்படவில்லை.
“வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட தொடர் யுத்தங்களும் பாரிய அழிவுகளும், பல இலட்சக்கணக்கான மக்களை, ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம் பெயரச் செய்தன. அவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள், தமது தராதரத்துக்கு ஏற்ப பல்வேறு தொழில்களை அந்நாடுகளில் புரிகின்றார்கள். ஆனால், அவர்களின் பிள்ளைகள், ஆங்கில மொழிக் கல்வியில் கல்வி பயின்று, சிறப்பான பதவிகளில் அந்நாடுகளில் அமர்ந்திருப்பது மகிழ்வைத் தருகின்றது.
“இங்கிருக்கின்ற இளைஞர் - யுவதிகளுக்கு, வெளிநாடு செல்ல வேண்டும் என்ற அவா நிறைய இருக்கின்றது. ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு அது, உயர் கல்விக்காக அல்ல. மாறாக பொருள் ஈட்டங்களைத் தேடிக்கொள்வதற்கும் சுகமான வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்வதற்குமேயாகும்.
“வெளிநாடுகளில் வசிக்கின்ற எமது உறவுகளின் இரண்டாம், மூன்றாம் தலைமுறைகள் எவ்வாறு இருக்கப் போகிறார்கள், என்ன மொழியைப் பேசப்போகின்றார்கள் என்பது பற்றி, எமக்கு ஓரளவு உய்த்துணர முடியும். பலர் தமது தாய் மொழியை மறவாது, தமது இளைய தலைமுறையினருக்குப் புகட்டி வருகின்றார்கள்.
“ஆகவே, இங்கிருக்கும் இளைஞர் - யுவதிகள் கற்றறிந்தவர்களாக, கல்வியில் மேம்பட்டவர்களாக, உலகத் தரத்தில் பேசப்படுபவர்களாக மாற வேண்டுமாயின், அவர்கள் முறையாக வழிகாட்டப்பட வேண்டும்.
“இன்று எமது இளைஞர் - யுவதிகள், பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர்களாக இருப்பினும், அவற்றை வெளிப்படுத்துவதற்கான உரிய களமொன்று அமைக்கப்படாமையால், முறையான வழிகாட்டல்கள் இன்றி, அவர்களில் பலர், குற்றச் செயல்களில் ஈடுபடத்துணிந்துள்ளார்கள்.
“அதீத திறமையுடையவர்கள், தொடர்ச்சியாக ஏதாவது கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஓய்வில் இருப்பதென்பது, அவர்களுக்கு விருப்பமற்ற ஒரு செயல். அவ்வாறானவர்கள் கவனிப்புகள் இன்றிவிடப்படும் போது, குற்றச்செயல்களில் அவர்களின் நாட்டம் தாவுகின்றது.
“இலங்கையில் காணப்படுகின்ற பட்டப்படிப்புகளில் பெரும்பாலானவை, சான்றிதழ் கற்கை நெறிகளாகவே காணப்படுகின்றன. அவர்களது கற்கை நெறிகள் முடிவடைந்ததும், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி முறையான திட்டங்கள் எதுவும் அவர்களுக்கு இல்லை. பல்கலைக்கழகங்களும் பல புதிய புதிய கற்கை நெறிகளை ஆரம்பிக்கின்றன.
அவற்றைக் கற்று முடித்த பின்னர், அம்மாணவ, மாணவியர் அக்கற்கை நெறி சார்ந்த தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வழிமுறைகள் எவையும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்பது மனவருத்தத்துகுரியது. அரசாங்கம், தான் நினைத்த வகையில், தனது அரசாங்க கொள்கைகளுக்கமைவாக, நியமனங்களை மேற்கொள்கின்றது. பல்கலைக்கழகங்கள், தம் வழியில் கற்கை நெறிகளை அறிமுகப்படுத்திக்கொண்டு செல்கின்றார்கள்” என்றார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago