2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

திருவிழாவில் குற்றமிழைத்தால் பிணை இல்லை

Gavitha   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் தேர், தீர்த்த திருவிழாவின்போது கலாசார சீரழிவு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாது கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திங்கட்கிழமை (07) எச்சரித்துள்ளார்.

போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணையின்போதே நீதிபதி இவ்வாறு எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நல்லூர் ஆலயத்தில் கூடி வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த ஆலயத்தின் தேர் மற்றும் தீர்தத்திருவிழாக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும். இந்தத் திருவிழாக்களில் புலம் பெயர் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து கலந்து கொள்வது வழக்கம். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நல்லூருக்கு வருகை தருவார்கள்.

இம்முறை நல்லூர் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களில் மாத்திரம் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தற்போதைய நாட்டுச் சூழலையடுத்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், நல்லூர் தேர் மற்றும் தீர்த்தத்திருவிழா காலங்களில் கலாசார சீரழிவு மற்றும் திருட்டுக்கள் உள்ளிட்ட குற்றங்கள் செய்பவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.

குற்றச் செயல்களைத் தடுப்பதே பொலிஸாரின் நோக்கம். அதற்கு உதவியாக நீதிமன்றங்கள் கட்டளை பிறப்பிக்க வேண்டியது காலத்தின் கடமையாகும் என் கூறிய நீதிபதி, நல்லூர் தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாவில் பொதுமக்களின் பொறுப்பு கடமைகள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான வழிகாட்டல்கள் தொடர்பில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து விசேட பொலிஸ் அணிகள் தேர்த்திருவிழாவின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏதாவது குற்றச்செயல்கள் நடைபெறும்போது, அதனைத் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் பொலிஸாரினால் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

இதனையடுத்து, குறித்த பிணை மனுவுக்கான ஆட்சேபனை மனுதாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கி விசாரணையை ஒத்தி வைத்துள்ள நீதிபதி, நல்லூர் உற்சவ காலத்தில் விசேடமாக தேர் மற்றும் தீர்த்தத்திருவிழாவை முன்னிட்டு, பொலிஸார் நல்லூரை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளமையால், மற்றைய பிரதேசங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாதிருப்பதற்காக பிணை மனுக்களை பரிசீலனை செய்ய முடியாது என தீர்ப்பளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .